மாநகர பேருந்தை திருடி ஓட்டிச்சென்ற நபர் கைது: சென்னை திருவான்மியூரில் பரபரப்பு!

By KU BUREAU

சென்னை: திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த மாநகர பேருந்தை திருடி ஓட்டிச்சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பேருந்து மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை, திருவான்மியூர் பேருந்து பணிமனையில் பொது போர்மேனாக சையது கியாஸ் (55) என்பவர் பணிபுரிந்து வருகிறார். பிராட்வேயில் இருந்து கோவளம் செல்லும் தடம் எண்.109 மாநகர பேருந்தை நேற்று (12.02.2025) இரவு திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தாகவும், இன்று (13.02.2025) அதிகாலை மேற்படி பேருந்தை அடையாளம் தெரியாத நபர் யாரோ திருடிச் ஓட்டி சென்று ஈஞ்சம்பாக்கம் பகுதியில் நிறுத்தி விட்டு, தப்பிச் சென்றதாவும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி மேற்படி சையது கியாஸ் திருவான்மியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

திருவான்மியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி பேருந்து திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட பெசண்ட் நகர் லூர்து சாமி மகன் ஆபிரகாம் (33) என்பவரை கைது செய்தனர். திருடப்பட்ட மாநகர பேருந்து மீட்கப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆபிரகாம் கார் இன்டீரியர் டெக்கரேஷன் வேலை செய்து வருவதும், அவர் குடிபோதையில் மாநகர பேருந்தை திருடி ஓட்டிச்சென்றதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஆபிரகாம் விசாரணைக்குப் பின்னர் இன்று (13.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE