சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பாமக-வின் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர். சமூகநீதியைக் காக்க எங்களோடு துணை நிற்பீர் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”சென்னையில் கடந்த புதன்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நீங்கள்,”இப்போது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பேசும் அன்புமணி ராமதாஸ், 4 ஆண்டுகளுக்கு முன்பு வன்னியருக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போது, எந்த அடிப்படையில் இந்த இட ஒதுக்கீட்டை வழங்குகிறீர்கள். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் கொடுங்கள் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டிருக்க வேண்டாமா? ” என்று வினா எழுப்பியிருக்கிறீர்கள். உங்களின் நேர்காணலைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் 45 ஆண்டுகளாக மருத்துவர் ராம்தாஸ் பாடுபட்டு வரும் நிலையில், அதை அங்கீகரிக்காமல், சாதிவாரி கணக்கெடுப்புக்கான எனது கோரிக்கையை அரசியல் என்று நீங்கள் கொச்சைப்படுத்துவதற்கு புரிதல் இல்லாமை தான் காரணம். அது குறித்து உங்களுக்கு விளக்குவதற்காகத் தான் இந்தக் கடிதம்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்றோ, நேற்றோ எழுப்பவில்லை. 1980ம் ஆண்டில் மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்கத்தை தொடங்கிய நாளில் இருந்தே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே தமிழ்நாட்டில் அனைத்து சாதியினருக்கும், அவரவர் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாத சூழலிலேயே இந்தக் கோரிக்கையை ராமதாஸ் முன்வைத்தார்.
» தஞ்சை சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: போக்சோவில் மளிகை கடைக்காரருக்கு 7 ஆண்டுகள் சிறை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பயணம் மிகவும் நீண்டது. 1980ம் ஆண்டில், சாதிவாரி மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய மருத்துவர் ராமதாஸ், அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ்நாடு முழுவதும் மாநாடு, பரப்புரை பயணம், உண்ணாவிரதம், பட்டை நாமப் போராட்டம் உள்ளிட்ட எண்ணற்ற வடிவங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். அதன் உச்சமாகத் தான் ஒரு நாள் சாலை மறியல் போராட்டம், ஒரு நாள் ரயில் மறியல் போராட்டம் ஆகியவற்றை நடத்தி 1987ம் ஆண்டில் ஒரு வார சாலை மறியல் போராட்டத்தை நடத்தினார்.
அந்தப் போராட்டத்தின் போது தான் 21 சொந்தங்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், தடியால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டனர் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சமூகநீதியைக் காக்க வேண்டும் என்பதற்காக மருத்துவர் அய்யா அவர்களும், பாட்டாளி மக்கள் கட்சியும் செய்த தியாகங்களும், அனுபவித்த கொடுமைகளும் ஏராளம்.
1985ம் ஆண்டில் தொடங்கி 1989ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி ராமதாஸ் சந்தித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பல கட்ட வலியுறுத்தலுக்குப் பிறகு மருத்துவர் ராமதாஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ராஜிவ் காந்தி, அது குறித்து மருத்துவர் ராமதாஸுடன் பேச்சு நடத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் சிலரை நியமித்தார். முதலில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நரசிம்மராவும், பின்னர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த பூட்டாசிங்கும் மருத்துவர் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனையும் மருத்துவர் ராமதாஸ் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்காகவும், சமுக நீதிக்காகவும் கோரிக்கை விடுத்தார். அவர்களில் எவருமே மருத்துவர் ராமதாஸின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை மறுக்கவில்லை. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகவே அனைவரும் உறுதியளித்தனர்.
1988ம் ஆண்டில் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, சக்தி வாய்ந்த ஆளுனராக பி.சி.அலெக்சாண்டர் திகழ்ந்தார். அவரையும் மருத்துவர் ராமதாஸ் பலமுறை சந்தித்து தமது கோரிக்கையை வலியுறுத்தினார். அதன் தொடர்ச்சியாகத் தான் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக அதிகாரி வெங்கட கிருட்டினன் தலைமையில் ஆணையம் அமைத்து 1988ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி அலெக்சாண்டர் ஆணையிட்டார். ஆனால், 1989ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த உடன் அந்த ஆணையத்தை கலைஞர் கலைத்து விட்டார்.
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும் என்று 2010ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதை இறுதி செய்யும்படி ஆணையிட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து சமுதாயத் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி சந்தித்த மருத்துவர் ராமதாஸ், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதைக் கேட்டு கண்டிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக வாக்குறுதி அளித்த கலைஞர், அவர் பதவி விலகும் வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
2011ம் ஆண்டில் முதல்வராக பொறுப்பேற்றிருந்த ஜெயலலிதா முற்றிலும் எதிரான அரசியல் நிலைப்பாட்டை பாமக எடுத்திருந்தாலும் கூட, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்; அதனடிப்படையில் தமிழ்நாட்டில் 69% இடஓதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதினார்.
அதன் பிறகும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முயற்சிகளையும், போராட்டங்களையும் மருத்துவர் ராமதாஸ் கைவிடவில்லை. 2019ம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி விதித்த 10 நிபந்தனைகளில் முதன்மையானது தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தான். அதன் பின் ராமதாஸும், நானும் குறைந்தது 6 முறை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதன் காரணமாகவும், அதன்பின் நாங்கள் நடத்திய போராட்டத்தின் பயனாகவும் தான் 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக நீதியரசர் குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீதியரசர் குலசேகரன் ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிக்கப்படாததால் அது முற்றிலுமாக செயலிழந்து போனது.
தமிழகத்துல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காக கடந்த சில ஆண்டுகளில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலும், எனது தலைமையிலும் நடத்தப்பட்ட போராட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றின் எண்ணிக்கை பத்துக்கும் மேல் இருக்கும் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். தேசிய அளவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 2000ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்யும், உள்துறை அமைச்சர் அத்வானியையும் மருத்துவர் ராமதாஸ் நேரில் சந்தித்து 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியதை இருவரும் ஏற்றுக் கொண்டனர். அதற்கான ஆணை பிறப்பிக்கப்படவிருந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்க மீட்புப் பணிகளை பார்வையிடுவதில் அத்வானி தீவிரமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதிருந்த மத்திய அரசு அதிகாரிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பையாவது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்திவிட வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக இருந்தது. இதற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிய நான், 2008ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை நேரில் சந்தித்து 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்திடப்பட்ட மனுவை அளித்தேன். பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சிவராஜ் பாட்டீலும் அப்போது ஒப்புக்கொண்டார்.
அதன் பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்ட போது லாலு பிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக் கொண்டது. மக்களவையில் இதுகுறித்த வாக்குறுதியை 2009-10ம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்தார். ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் எதற்கும் உதவாத சடங்கு ஒன்றை அப்போதைய மத்திய அரசு நடத்தி மக்களை ஏமாற்றியது.
2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக கடந்த 6 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. 2019ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற சில மாதங்களில் 2019ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி அவரை டெல்லியில் சந்தித்த மருத்துவர் ராமதாஸும், நானும் 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் எனக் கோரினோம்.
அதன்பின், 2020ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி, 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி, 2024ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி ஆகிய நாட்களில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதினார் என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் மருத்துவர் ராமதாஸின் வலியுறுத்தலை ஏற்று மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கிய கட்சி என்ற முறையில் அதன் மீது எனக்கு மதிப்பு உண்டு. அதேபோல், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2022ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து சாதகமான பதிலைப் பெற்றவர் என்ற அடிப்படையில் உங்கள் மீதும் எனக்கு மதிப்பு உண்டு.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக மருத்துவர் ராமதாஸும், நானும் பாட்டாளி மக்கள் கட்சியும் எண்ணிலடங்காத பணிகளை செய்திருக்கும் நிலையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக பாட்டாளி மக்கள் கட்சி என்ன செய்தது ? இந்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அரசியல் செய்கிறார் என்று நீங்கள் கூறுவதெல்லாம் பாமக-வின் உன்னதமான சமூக நீதி பணிகளை கொச்சைப்படுத்துவது ஆகும். இந்தக் கடிதத்தைப் படித்த பிறகாவது சாதிவாரி கணக்கெடுப்புக்காக பாமக செய்த பணிகளை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்; மாநிலங்களில் மாநில அரசுகள் 2008ம் ஆண்டு புள்ளி விவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மனநிலையும் இத்தகையதாகவே இருக்கிறது. இதற்காகத் தான் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த விவகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான ஒற்றுமையை புரிந்து கொண்டு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்; பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்பதால் அதை ஏற்று தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை நீங்கள் கண்டிப்பாக செய்வீர்கள். தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும் உன்னத முயற்சிக்கு துணை நிற்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.