விருதுநகர்: தாதப்பட்டியில் கடந்த 5-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே உள்ள சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீசத்தியபிரபு பட்டாசு ஆலை விருதுநகர் சின்னவாடியூர் அருகே உள்ள தாதப்பட்டியில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் கடந்த 5-ம் தேதி பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 8 அறைகள் இடிந்து தரைமட்டமாயின.
இந்த விபத்தில் அருப்புக்கோட்டை அருகே உள்ள வதுவார்பட்டியைச் சேர்ர்ந்த ராமலட்சுமி (33) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் (33), பொம்மையாபுரத்தைச் சேர்ந்த நாகப்பநாயக்கர் மனைவி முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த ஜெயமுருகன் மனைவி மாணிக்கம் (50), அதிவீரம்பட்டியைச் சேர்ந்த காசிமாயன் மனைவி கஸ்தூரி (33), ரவிச்சந்திரன் மனைவி வீரலட்சுமி (35) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இந்நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சைமன் டேனியல் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வீரலட்சுமியும் உயிரிழந்தார். இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.