மானாமதுரை அருகே பள்ளி கட்டிடம் சேதம்: ஆய்வுக்கு வந்த ஆட்சியரிடம் ஆசிரியர்கள் முறையீடு!

By KU BUREAU

சிவகங்கை: மானாமதுரை அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர வலியுறுத்தி ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் ஆசிரியர்கள் முறையீடு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்னகண்ணனூரில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து 85 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் விஜயகுமார், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் கார்த்திகேயன், வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை ஆட்சியர் ஆய்வு செய்தார். ஆட்சியருக்கு பூங்கொத்து கொடுத்து மாணவர்கள் வரவேற்றனர். பின்னர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரிடம், பள்ளி மேற்கூரையில் இருந்து அடிக்கடி சிமென்ட் காரை பெயர்ந்து விழுவதாகவும், சுவர்களும் சேதமடைந்திருப்பதாகவும் ஆசிரியர்கள் முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE