தேனியின் 19-வது ஆட்சியராக ரஞ்சித்சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் 

By என்.கணேஷ்ராஜ்

தேனி: தேனியின் 19-வது ஆட்சியராக ரஞ்சித்சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தேனி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த ஆர்.வி.ஷஜீவனா சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளராக கடந்த வாரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக சேலம் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்த ரஞ்சித்சிங் தேனி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் புதிய ஆட்சியர் ரஞ்சித்சிங் இன்று(பிப்.13) காலை தேனியில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் 2016-ல் ஐஏஎஸ்.அதிகாரியானார். கால்நடை பராமரிப்புத் துறையின் துணை செயலாளராக பணிபுரிந்துள்ளார்.

2024 ல் நாகப்பட்டினம் கூடுதல் ஆட்சியர், சேலம் மாநகராட்சியின் 25-வது ஆணையாளராகவும் பணிபுரிந்துள்ளார். மாவட்டத்தின் 19-வது ஆட்சியர் இவர். செய்தியாளர்களிடம் இவர் கூறுகையில், ''அரசு திட்டங்களை தேனி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இம்மாவட்டம் வனம் நிறைந்து காணப்படுவதால் அதற்கான தனி கவனம் மேற்கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். வேலைக்கான நேரம் எதுவும் பார்ப்பதில்லை. எந்தநேரமும் பொதுமக்களும், அதிகாரிகளும் என்னை தொடர்பு கொள்ளலாம்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதியதாக பொறுப்பேற்ற ஆட்சியருக்கு அதிகாரிகள், காவல்துறையினர் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE