ஓசூர் பழைய பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ: நள்ளிரவு முதல் போராடும் தீயணைப்பு வீரர்கள்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூரில் பழைய பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவு முதல் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் போராடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஜீபி பகுதியில், சம்பங்கிராமையா மற்றும் சுரேஷ் ஆகிய இருவருக்கும் சொந்தமான சுமார் 30 சென்ட் பரப்பளவில் பழைய பொருட்கள் கிடங்கு உள்ளது. இதில் பழைய பேப்பர்கள், பிளாஸ்டிக், துணிகள், இரும்புகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடிரென கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த ஓசூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் கிடங்கு முழுவதும் தீ பரவ தொடங்கி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால் தீயை அணைக்க முடியாததால் அருகே உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10 தீயணைப்பு வாகனங்களை வரவழைக்கப்பட்ட வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் தீ விபத்து ஏற்பட்ட குடோனை சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்த பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப் பட்டனர். நள்ளிரவில் இருந்து தொடர்ந்து தீ அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்து குறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE