பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: திமுக அரசை கண்டித்து 18-ம் தேதி அதிமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

By KU BUREAU

பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறியதாக திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் வரும் 18-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதுபோல கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களும் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன.

இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது.

திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக பள்ளி, கல்லூரி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து இடங்களிலும் மாணவிகளுக்கு எவ்வித அச்சமும் இல்லாமல் சர்வசாதாரணமாக பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதனால் பெண் பிள்ளைகளின் பெற்றோர் மிகுந்த அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர். இந்த அவல நிலைக்கு காரணமான முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும் அதிமுக மாணவரணி சார்பில் வரும் 18-ம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதிமுக மகளிர் அணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், அதிமுக மாணவரணிச் செயலாளற் சிங்கை ஜி.ராமச்சந்திரன் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில், அதிமுக மாணவரணி மாநில துணை நிர்வாகிகளும், அதிமுக அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் மாணவரணிச் சேர்ந்த நிர்வாகிகளும் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE