சர்வோதய மேளா தினம்: ராமேசுவரம் கடலில் காந்தியடிகளுக்கு மலரஞ்சலி

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட 77-ம் ஆண்டினை முன்னிட்டு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் இறப்பினைத் தொடர்ந்து அவரது அஸ்தி ராமேசுவரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் 1948-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி கரைக்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த நாளினை சர்வோதய மேளா தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 12 அன்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் மலரஞ்சலி செலுத்துவதை சர்வோதய சங்கத்தினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சர்வோதய தினமான இன்று மதுரை மாவட்ட சர்வோதய சங்கத்தின் செயலாளர் ஆர்.கண்ணன் தலைமையில் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து கடலில் மலரஞ்சலி செலுத்தினர். இதில் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வோதய சங்கத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சர்வ மத பிரார்த்தனை, நூற்புவேள்வி மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சர்வோதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE