சென்னை: மனித உரிமைச் செயற்பாட்டாளரும் சிங்கள பேரினவாதத்தால் 2009இல் படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காக பன்னாட்டு அரங்கில் செயற்பட்டு வரும் பொஸ்கோ மரியதாசினை சுவிட்சர்லாந்து அரசு சட்டத்துக்கு முரணாக கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மனித உரிமைச் செயற்பாட்டாளரும் உலகத் தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளருமான பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் கடந்த ஜனவரி மாதம் 15, 16 தேதிகளில் ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உரிமைகளுக்கான மாநாட்டில் கலந்துக் கொண்டிருந்த போது மாநாட்டு மண்டபத்தில் வைத்து சுவிஸ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் சட்டத்துக்கு முரணான வகையில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சட்டத்துக்கு முரணான கைதும் தடுப்பு காவலும் அவரின் செயற்பாடுகளை முற்று முழுதாக முடக்குவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாக இருக்கிறது. ஐ.நா சபை, ஐரோப்பிய நாடாளுமன்றம் உள்ளிட்ட பன்னாட்டு தளங்களில் தமிழர்களின் நீதிக்கும் உரிமைக்குமான செயற்பாடுகளை கடந்த 27 வருடங்களாக தொடர்ச்சியாக பல்வேறு தளங்களில் ஒருங்கிணைத்து நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் பொஸ்கோ மரியதாஸை பல வழிகளிலும் முடக்குவதற்கு வல்லாதிக்க சக்திகளும் பேரினவாத சிங்கள அரசும் தொடர்ந்து முயற்சித்து வந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசால் தற்போது சட்ட முரணாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ இனப் படுகொலைக்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட தமிழர்களின் நீதிக்காக புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்பட்டு வரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையிலும் நீதிக்கான நடவடிக்கைளை மட்டுப் படுத்துவதிலும் வல்லாதிக்க நாடுகள், அதன் உளவு அமைப்புகள், பேரினவாத சிங்கள அரசிற்கு துணையுடனும் ஆதரவாகவும் செயற்பட்டு வந்துள்ளன. பேரினவாத சிங்கள அரசிற்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராகவும் சுவிஸ் அரசாங்கம் பொஸ்கோ மரியதாஸை கைது செய்துள்ளது. ஐ.நா மன்றத்தில் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நீதிக்காக செயற்பட்டு வரும் அமைப்பினை சார்ந்தவர்களை கைது செய்வதும் அவர்களின் நடவடிக்கைகளை முடக்கும் செயல்கள் மனிதஉரிமைகளுக்கு எதிரானதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
» அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு: தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்!
» விசிக நிர்வாகி தாக்கியதாக பொய் புகார்: சிவகங்கை காவல் பெண் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
தமிழின படுகொலையில் சிங்கள பேரினவாத அரசின் செயல்களை ஆதரிக்கும் போக்காகவும், நீதிக்காக போராடும் மக்களின் உரிமையை நசுக்குவதாகவும் உள்ள சிங்கள பேரினவாத அரசு மற்றும் சுவிஸ் அரசின் செயல்பாடுகளை பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள், நீதிக்கான மக்கள் இயக்கங்கள் என அனைவரும் கண்டிக்க வேண்டும் எனவும் பொஸ்கோ மரியதாஸை உடனடியாக விடுதலை செய்யப்பட உலகத் தமிழர்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது” என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.