சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பம்ப் செட்டுகளுக்கான ரிமோட் மோட்டார் ஆபரேட்டர் கருவியை மானிய விலையில் பெற்றுப் பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரிக்க வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திர மயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்யவும் வழிவகுக்கப்படுகிறது.
நடப்பு 2024-25-ம் ஆண்டில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பம்ப் செட்டுகளுக்கான ரிமோட் மோட்டார் ஆபரேட்டர் கருவியை பெற அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, விவசாயிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இம்மானியத் தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.
செல்போன் மூலம் மின்மோட்டார் இயங்கும்போது, மின்சாரம் தடை மற்றும் மீண்டும் இயங்கும்போது குறுஞ்செய்தி மூலம் செல்போனுக்கு தகவல் வந்துவிடும். மேலும் கிணற்றில் நீர் வடிந்துவிட்டால், பம்ப் இயங்கும்போது தானாக நிறுத்தம் செய்து செல்போனுக்கு தகவல் வந்துவிடும். குறிப்பாக, இரவு நேரங்களில் நீர் பாய்ச்சுவதற்கு வீட்டில் இருந்தே செல்போன் மூலம் இயக்கலாம். தினசரி குறிப்பிட்ட நேரத்தில் இயங்கும்படி, செல்போனில் முன்னரே பதிவு செய்யும்பட்சத்தில் மோட்டார் இயங்கும்போது தகவல் வந்துவிடும்.
» ‘தோல்வி மேல் தோல்வி கண்ட தோல்விசாமி’ - எடப்பாடி பழனிசாமியை விளாசும் செந்தில்பாலாஜி!
» திருப்பரங்குன்றத்தில் கந்தூரி என தகவல் பரப்பினால் நடவடிக்கை: முஸ்லிம் ஐக்கிய ஜமாத் புகார்
மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விவரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் சேலம்- 7 குமாரசாமிப்பட்டி செயற்பொறியாளரை 04287-2906266 என்ற எண்ணிலும், உதவி செயற்பொறியாளரை 04287 2905277 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், வேளாண்மைப் பொறியியல் துறையின் நங்கவள்ளி ரோடு, கோனூர் அஞ்சல் உதவி செயற்பொறியாளரை 04298-290361 என்ற எண்ணிலும், ஆத்தூர் தென்னங்குடிபாளையம் உதவி செயற்பொறியாளரை 04282-290585 என்ற எண்ணிலும், சங்ககிரி வட்டம், குப்பனூர் பைபாஸ் பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளரை 04283 290390 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்று தெரிவித்துள்ளார்.