நீலகிரி பூண்டு விலை கிலோ ரூ100 ஆக சரிவு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி: நீலகிரி பூண்டு விலை கிலோ ரூ.100-ஆக குறைந்துள்ளதால், உழவர் சந்தையில் பூண்டு விற்பனை செய்ய விவசாயிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகையை சுற்றியுள்ள எம்.பாலாடா, கல்லகொரைஹாடா, கொல்லிமலை ஓரநள்ளி, தேனாடுகம்பை, கடநாடு, காரபிள்ளு, எப்பநாடு, பெர்ன்ஹில் ஆகிய பகுதிகளில் மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இதில், நீலகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வெள்ளை பூண்டுக்கு ருசி, மணம் இருப்பதால், தமிழகம் உட்பட பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

எப்போதும் உதகை பூண்டுக்கு நல்ல விலை கிடைப்பதால், அந்தந்த போகத்துக்கு ஏற்றார்போல் அதிகளவில் பயிரிடுகின்றனர். கடந்த சில மாதங்களாக உதகை பூண்டு கிலோ ரூ.350 முதல் ரூ.600 வரை விற்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கவலையடைந்தனர். அதேசமயம், பூண்டுக்கு அதிக விலை கிடைத்ததால், நீலகிரி மாவட்டத்தில் பல ஏக்கரில் பூண்டு பயிரிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பூண்டு விலை சரிந்தது. நேற்றைய நிலவரப்படி, உதகை பூண்டு கிலோ ரூ.100-க்கும், பிற மாநில பூண்டு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும், உதகை உழவர் சந்தையில் பூண்டு விலை ரூ.100, ரூ.80 என நிர்ணயிக்கப்பட்டதால், பூண்டு விற்பனை செய்ய மறுத்து, உழவர் சந்தை விவசாயிகள் கடைகளை நேற்று திறக்கவில்லை. விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரியதற்கு, உழவர் சந்தை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "மேட்டுப்பாளையம் மண்டியிலேயே உதகை பூண்டு கிலோவுக்கு ரூ.100 தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பூண்டு விளையும் உதகையில் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய முடியாது. நுகர்வோரின் நலனை கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகள் பூண்டு விற்பனை செய்ய மறுத்துள்ளனர். இதனால், அவர்களுக்கு தான் நஷ்டம் ஏற்படும்"’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE