மதுரை: செங்கோட்டையன் அதிமுகவுக்கு எதிராக பேசவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில், ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் இல்லாதது குறித்து அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு விவசாயிகளிடம்தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவையும், பொதுச் செயலாளர் பழனிசாமியையும் அவர் குறை சொல்லவில்லை. நிகழ்ச்சி நடத்தியது விவசாயிகள் சங்கம். எனவே, அவரது கருத்தால் அதிமுகவில் சலசலப்பு ஏதுமில்லை. ஆனால், சிலர் இதை முன்னிறுத்தி அதிமுகவுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்.
அடுத்த முதல்வர் பழனிசாமிதான். இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அதிமுகவையும், பழனிசாமியையும் சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள்.
முதல்வரை வரவேற்க பணம் கொடுத்து ஆட்களைத் திரட்டுகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரை விவசாயிகள் அழைத்துப் பாராட்டு விழா நடத்துவதை ஆளுங்கட்சியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, செங்கோட்டையன் கருத்துக்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.