புதுச்சேரி: புதுவை மாநில சட்டப்பேரவையில் காகிதமில்லாத பேரவைக் கூட்டங்களை நடத்தும் வகையில் 34 கையடக்க கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை நாளை பரிசோதனை இயக்கம் செய்யப்படவுள்ளது. இது முழுமையாக மார்ச் மாத கூட்டத்தில்தான் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டப் பேரவை நாளை கூடுகிறது. இதையொட்டி பேரவை வளாகம் தூய்மை செய்யப்பட்டு கொசு அதிகமாக இருப்பதால் மருந்து தெளித்து, பூச்செடிகள் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டன. அதையடுத்து பேரவை கூட்ட அரங்கம் தயார் நிலையில் உள்ளதா என பேரவைத் தலைவர் செல்வம் இன்று பார்வையிட்டார். அப்போது மத்திய அரசு வழங்கிய ரூ.8.6 கோடியில் காகிதமில்லா பேரவைக் கூட்டம் நடத்துவதற்காக பொருத்தப்பட்டிருந்த கையடக்க கணினிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''மத்திய அரசு அனைத்து மாநில சட்டப்பேரவைக் கூட்டங்களையும் காகிதமில்லாத கூட்டங்களாக நடத்துவதற்கு நிதி அளித்தது. அதன்படியே புதுவை மாநில சட்டப்பேரவைக்கும் ரூ.8.6 கோடி நிதியை மத்திய அரசு அளித்தது. அதன்மூலம் பேரவைத் தலைவர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கை முன்பு நவீன கையடக்க கணினி அமைக்கப்பட்டுள்ளன. அக்கணினி வாயிலாகவே உறுப்பினர்கள் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைப் பார்த்து படித்து பேசவேண்டும்.
உறுப்பினர்களின் கேள்வி, பதில்களும் கணினி மூலம் பதிவு செய்யப்படவுள்ளன. கணினி இயக்க முறையை கண்காணிப்பதற்கு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. கணினி செயல்பாடுகளை முறைப்படி முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை காலை தொடங்கிவைக்கிறார். நாளை முன்னோட்டமாக கையடக்க கணினி மூலம் காகிதமில்லா சட்டப்பேரவை கூட்டம் நடக்கும்.
» வீட்டை விட்டு வெளியேற்றிய 2 மகன்கள் மீது நடவடிக்கை: திருப்பத்தூர் ஆட்சியரிடம் வயதான தம்பதி மனு!
» அரிய வகை நோய் பாதித்த சிறுவனின் சிகிச்சைக்கு ரூ.40 லட்சம் தேவை: வேலூர் ஆட்சியரிடம் பெற்றோர் மனு
காகிதமில்லாத கூட்டத்தை நடத்துவதற்கான தயார் நிலையில் புதுவை பேரவை கூட்டரங்கம் உள்ளது. ஆனால், வரும் மார்ச்சில் புதுவைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ள கூட்டத்தில்தான் கணினிகள் செயல்படுத்தப்படவுள்ளன" என்றார்.
எம்எல்ஏக்கள் இருக்கைக்கு அருகேய கையடக்க கணினி (டேப்) வைபை இணைப்புடன் உள்ளது. தனித்தனி பாஸ்வேர்ட் உள்ளது. இதுவரை நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பதிவுகளில் உள்ள அனைத்து கேள்வி, பதில்களும் இதில் பதிவு செய்யும் பணி நடக்கிறது.