அரிய வகை நோய் பாதித்த சிறுவனின் சிகிச்சைக்கு ரூ.40 லட்சம் தேவை: வேலூர் ஆட்சியரிடம் பெற்றோர் மனு

By KU BUREAU

வேலூர்: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்க ரூ.40 லட்சம் செலவாகும் என்பதால் அரசின் சார்பில் உதவி செய்யும்படி மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெற்றோர் மனு அளித்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், தனித்துணை ஆட்சியர் கலியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டனர்.

கூட்டத்தில், கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் ஈ.பி.காலனியை சேர்ந்த வசந்தா என்பவர் தனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியுடன் வந்து அளித்த மனுவில், ‘‘மனநலம் பாதித்த எனது சகோதரியின் நிலத்தை உறவினர்கள் சிலர் யாருக்கும் தெரியாமல் அபகரித்துள்ளனர். அதனை மீட்டுத்தர வேண்டும்’’ எனத் தெரிவித்திருந்தார்.

வேலூர் ஓட்டேரி அடுத்த நாயக்கனேரி பகுதி மக்கள் அளித்த மனுவில், ‘‘நாயக்கனேரி கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எனவே, எங்கள் கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்ராம், கவிதா தம்பதி அளித்த மனுவில், ‘‘நாங்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களது 4 வயது மகன் பிரனீத்சாய்க்கு கடந்த 2 ஆண்டுகளாக உடலில் வளர்ச்சியின்மை பிரச்சினை உள்ளது. தனியார் மருத்துவமனையில் நடத்திய பரிசோதனையில் எனது மகனுக்கு ‘மீயூகோ போலி சாக்கரிடோசிஸ்-4 எனப்படும் அரியவகை மரபணுக் கோளாறு உள்ளதாகத் தெரிவித்தனர். இந்த நோய் உள்ளவர்களுக்கு உடல் உறுப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாகச் செயலிழக்கும் எனத் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளித்தோம். அங்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தால் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறினர். இதற்கு சுமார் ரூ.40 லட்சம் செலவாகும் எனத் தெரிவித்தனர். எனவே, எனது மகனின் மருத்துவச் சிகிச்சைக்கு மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 424 மனுக்கள் பெறப்பட்டன அவற்றின் மீது விரைவாகத் தீர்வு காணச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 35-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் அஜித், வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை லேக்கா மால்டா ஆகியோரும், நாக்பூரில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகளில் சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE