நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் தேங்கும் குப்பை பீச்ரோட்டில் உள்ள வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. அதேபோல், கடந்த 7-ம் தேதி காலை குப்பைக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.
சுற்றுப்புற பகுதிகளில் புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். வாகனங்களில் செல்வோர் அவதிக்குள்ளாயினர். சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை அணைக்க நேற்று 4-வது நாளாக முயற்சிகள் நடைபெற்றது. தீ வேகமாக பரவுவதால், அதை கட்டுப்படுத்த தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து மேலும் 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப் பட்டன.
தற்போது 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். குப்பையை ஜேசிபி மூலம் கிளறி தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீயை இன்றைக்குள் கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.