மதுரை: மதுரையிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை எடுத்து உண்டியலில்போட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். அதன் பேரில், அந்த உத்தரவை ரத்து செய்துள்ளதாக மதுரை மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் க.செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரையில் நேதாஜி சாலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில் சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் சம்பளம் நிர்ணயித்து ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால், தொடக்க காலத்திலிருந்தே பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கைகள் கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இருப்பினும், கோயில் செயல் அலுவலரால் தட்டு காணிக்கை தொடர்பாக பிப்ரவரி 7-ம் தேதியன்று பிறப்பித்த உத்தரவு, அவராலேயே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கோயில் தக்காரிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளதால், செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.