விருதுநகர் வேதனை: மின் மோட்டார் பழுதால் சந்தூர் உட்பட 50 கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: தளி அள்ளி தலைமை நீரேற்று நிலையம் அருகேயுள்ள தண்ணீர் தொட்டி முறையான பராமரிப்பு இல்லாததாலும், மின் மோட்டார் பழுது காரணமாகவும் சந்தூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆட்சியர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி அணை நீரை அடிப்படையாகக் கொண்டு தென்பெண் ணை ஆற்றில் இருமத்தூர் வரை 17 இடங்களில் ஆழ்துளையுடன் கூடிய உறைக்கிணறுகள் அமைக்கப்பட்டு, 17 குடிநீர்த் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகி வருகிறது.

இந்நிலையில், தளிஅள்ளி தலைமைநீரேற்றுநிலையம் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தளிப்பட்டி, காட்டாகரம், மகாதேவ கொல்ல ஹள்ளி, கண்ணன்டஹள்ளி ஊராட்சிகளுக்கு நீரேற்றம் செய்யப்படும் தொட்டியின் மேற்கூரை சேதமாகி, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து தொட்டிக்குள் விழுந்துள்ளன. மேலும், தொட்டியின் மேற்கூரை சேதமடைந்திருப்பதால், தொட்டியின் உள்ளே இலைகள், சருகுகள், தூசிகள் விழுந்துள்ளன. மேலும், நீரேற்றம் செய்ய பயன்படுத்தப்படும் மின் மோட்டார் அடிக்கடி பழுதாகி வருகிறது.

இதனிடையே, மின்மோட்டர் பழுதாகிக் கடந்த 15 நாட்களுக்கு மேலாக சந்தூர், மகாதேவகொல்லஹள்ளி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குக் கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: தளிஅள்ளி தலைமை நீரேற்றம் நிலையத்தின் அருகே கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும், இங்குள்ள மின்மோட்டார் வாங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாகி வருவதால், அடிக்கடி பழுதாகி வருகிறது. இதேபோல, மின் ஒயர்கள் மின் அழுத்தம் தாங்க முடியாமல் சேதமாகி வருகிறது. இதன் காரணமாக 4 ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன.

தற்போதும், மின்மோட்டார் பழுதால் குடிநீர் விநியோகம் கடந்த 15 நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குடிநீரின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் டிராக்டர் மூலம் கிணற்று நீர் விநியோகம் செய்யப்படுகிறது. பாதுகாப்பற்ற இத்தண்ணீரை பருகும் மக்களுக்கு, சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், போதிய அளவில் தண்ணீர் வழங்குவதில்லை.

எனவே, இப்பிரச்சினையைத் தீர்க்க நீரேற்ற நிலையத்தை ஆட்சியர் ஆய்வு செய்து, அங்குள்ள தண்ணீர் தொட்டியின் மேற்கூரையைச் சீரமைக்கவும், புதிய மின் மோட்டார் வாங்கி பயன்படுத்தவும் ஊராட்சி நிர்வாகத்துக்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE