ஆனைமலை: 45 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட வளர்ப்பு யானை ராமு உயிரிழப்பு

By KU BUREAU

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முகாமில் கடந்த 45 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டுவந்த ராமு என்ற யானை உடல் நல பாதிப்பால் நேற்று உயிரிழந்தது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில், வனத்துறை சார்பில் 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அருகில் உள்ள மற்றொரு முகாமான வரகளியாறு முகாமுக்கு யானைகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். தற்போது கோழிகமுத்தி முகாமில் பாகன்கள் குடியிருப்பு உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் சில வளர்ப்பு யானைகள் வரகளியாறு முகாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. அதில் 55 வயதான ராமு என்ற வளர்ப்பு யானையும் ஒன்று. சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரிக்கு வளர்ப்பு யானை ராமு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த யானைக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.இந்நிலையில், கடந்த இரு தினங்களாக நீரிழப்பு மற்றும் செரிமான கோளாறு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் விஜயராகவன் தலைமையில் மருத்துவ குழுவினர், கல்லீரல் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், அழற்சி எதிர்ப்பு வைட்டமின்கள் மற்றும் செரிக்கக்கூடிய பசுந்தீவனங்கள் ஆகிவற்றை வழங்கி சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.20 மணிக்கு வளர்ப்பு யானை ராமு உயிரிழந்தது. உடற்கூராய்வுக்கு பிறகு யானையின் உடலை பாகன்கள் மற்றும் காவடிகள் முறையான சடங்குகளை செய்து அடக்கம் செய்தனர். இந்த யானை கன்னியாகுமரி மாவட்டம் காளிகேசம் வனப்பகுதியில் கடந்த 1978ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி பிடிக்கப்பட்டது.

பின்னர், ராமு என பெயரிடப்பட்டு, கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனைமலை புலிகள் காப்பக முகாம்களில் பராமரிக்கப்பட்டு வந்தது. முகாமின் மூத்த யானை உயிரிழந்தது பாகன்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமு யானையின் இறப்பால் முகாம் யானைகளின் எண்ணிக்கை 23 ஆக குறைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE