கோவை: சூளேஸ்வரன்பட்டியில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: ”சூளேஸ்வரன்பட்டியில் வசித்துவரும் ஜெயந்தி என்பவர் சில ஆண்டுகளாக அப்பகுதியில் தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு, பண்டிகை சீட்டு உள்ளிட்டவைகளை நடத்தி வந்தார். இப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் இந்த சீட்டுகளில் வாரம் மற்றும் மாத தவணைகளில் பணம் கட்டி வந்தோம். அதற்காக ஜெயந்தி திரிபுவனம் என்னும் பெயரில் தவணை புத்தகம் அச்சிட்டு, அதில் பணம் வரவு வைத்து வந்தார்.
இந்நிலையில் தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு ஆகியவற்றின் முதிர்வு காலம் முடிந்து நான்கு மாதங்களுக்கு மேலாகியும், பணம் கட்டியவர்களுக்கு முதிர்வு தொகையுடன் கூடிய சீட்டு பணத்தை திருப்பி தரவில்லை. இதுகுறித்து பலமுறை ஜெயந்தியிடம் முறையிட்டும் அவர் உரிய பதில் அளிக்கவில்லை. சுமார் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ள ஜெயந்தி தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகளின் மின்கட்டண பாக்கி ரூ.7,351 கோடி: அதிர்ச்சி தகவல்!
» அத்திக்கடவு - அவிநாசி திட்ட விழாவை அரசியலாக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்