அத்திக்கடவு - அவிநாசி திட்ட விழாவை அரசியலாக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

By KU BUREAU

சென்னை: விவசாயிகளால் நடத்தப்பட்ட அத்திக்கடவு- அவிநாசி திட்ட விழாவை அரசியலாக்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் அதிமுக அலுவலக திறப்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அத்திக்கடவு- அவிநாசி திட்ட அழைப்பிதழில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக்கூறி நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து கேட்டபோது, "அத்திக்கடவு -அவிநாசி திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம். அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர் பழனிச்சாமி.

80 சதவீத பணிகள் பழனிசாமி ஆட்சியிலேயே முடிக்கப்பட்டது. மீதம் 20 சதவீத பணிகளை திமுக மெத்தனமாக மெற்கொண்டு 3 ஆண்டுகள் கழித்து தொடங்கி வைத்துள்ளனர். அந்த திட்டத்துக்கு உண்மையான காரணம் ஜெயலலிதாவும், பழனிசாமியும் தான். எல்லா கட்சியையும் சார்ந்த விவசாயிகள் அத்திக்கடவு -அவினாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பில் இருக்கிறார்கள். அரசியல் கலப்பு இருக்கக் கூடாது.

முழுக்க முழுக்க விவசாயிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி. அது அதிமுக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி இல்லை. கட்சியினருக்கு மனக்குறை எதுவாக இருந்தாலும் பொதுச்செயலாளரிடம் முறையிடலாம்" என்றார்.

அதிமுக, பாஜக, நாதக மறைமுக கூட்டணி முன்னோட்டமே ஈரோடு தேர்தல் என்று திருமாவளவன் பேசியது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, "எங்களுக்கு மறைமுக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. வெட்டு ஒன்னு.. துண்டு ரெண்டு என்பதுதான் எங்களுக்கு தெரியும். எந்தவித மறைமுக கூட்டணியும் யாருடனும் இல்லை என பொதுச் செயலாளர் தெளிவாக ஏற்கனவே கூறிவிட்டார். பாஜகவோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை. அந்த நிலைப்பாடே தொடர்கிறது. திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதை எல்லாம் மறந்துவிட்டு திருமாவளவன் பேசுகிறார். பட்டியலின மக்களுக்காக உருவான இயக்கம் திசைமாறி போகிறது" என்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்ற குறித்து கேட்டதற்கு, "அணையும் விளக்கு சுடர் விட்டு எரிவதுபோல், திமுகவின் ஈரோடு தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. நாங்கள் கலந்துகொண்டால்தான் அது தேர்தல்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE