தமிழக வளர்ச்சியை தடுக்க நினைப்போரை இரும்புக்கரம் கொண்டு முதல்வர் அடக்க வேண்டும்: ஓபிஎஸ்

By KU BUREAU

தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு முதல்வர் அடக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர், தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க சதி நடப்பதாக கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது என்பது உண்மைக்கு மாறான தகவல். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்ற வளாகங்கள், காவல் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் என எங்குமே பாதுகாப்பு இல்லாத ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. எப்போது என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர். பாலியல் வன்கொடுமைகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

முதல்வருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய கடமையைச் செய்ய அவர் தவறிவிட்டார். அமைதியை சீர்குலைக்க சதி நடக்கிறது என்றால் அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, அமைதியை சீர்குலைக்க சதி நடக்கிறது என்று சொல்வது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு. இது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல். முதல்வர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்,தி அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க நினைப்போரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE