திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவித்து பராமரிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில், தமிழக தொல்லியல் துறை பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரத்தைச் சேர்ந்த ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:
நான் தமிழகத்திலுள்ள அனைத்து தமிழ் சமணக் கோயில்களின் குருவாக இருக்கிறேன். திருப்பரங்குன்றம் மலையில் சமண நினைவுச் சின்னங்கள் பல உள்ளன. மேலும், திருப்பரங்குன்றம் கோயில் சமண சமயத்துக்குரிய பல கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. தற்போது இந்த மலை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என பல இந்து அமைப்புகள் கூறுகின்றன.
திருப்பரங்குன்றம் மலையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ்-பிராமி எழுத்துகள் சமண காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவை கி.பி.யின் ஆரம்ப நூற்றாண்டுகளில் இப்பகுதியில் இருந்த சமணத் துறவிகள், அவர்களின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் உள்ளன. திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அருகில் சமணத் துறவிகளுக்குச் சொந்தமான பல பாறைக் குகைகள் உள்ளன.
இக்குகைகள் தமிழ்நாட்டிலுள்ள சமணக் குகைக் கோயில்கள் , சமணக் கட்டிடக்கலை பாணியைப் பிரதிபலிக்கின்றன. திருப்பரங்குன்றத்தின் வடக்குப் பகுதியில் மகாவீரர், ரஸ்வநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் உள்ளன. மகாவீரர், ரஸ்வநாதர் சமண சமயத் தீர்த்தங்கரர்கள். பாகுபலியும் சமண சமயக் கடவுள். திருப்பரங்குன்றம் மலையின் ஒரே இடத்தில் பாறையின் சுமார் ஓரடி உயரத்தில் இரண்டு சமணப் பாறைகள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த வரலாற்று உண்மைகள் திருப்பரங்குன்றம் மலையில் சமண ஆதிக்கம் இருந்ததை நிரூபிக்கின்றன. சமீபத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் இந்த மலைகளிலுள்ள சமணக் குகைகளைச் சீர்குலைப்பது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது சமணக் கோயில்கள், கட்டமைப்புகளின் புனிதத்தை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது. சமண மக்களின் மத உணர்வுகளையும் பாதித்துள்ளது.
எனவே, மலையைப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கையை இந்திய தொல்லியல் துறை எடுக்க வேண்டும். அத்தகைய நினைவுச் சின்னத்தில் எந்தவித மத நடவடிக்கையாக இருந்தாலும், தொல்லியல் துறையின் அனுமதியுடன் மட்டுமே நடத்தப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் மலைப்பகுதி ஒரு சமண தளம். ஒரு வரலாற்று நினைவுச் சின்னம். சட்டவிரோதச் செயல்களால் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி வசிப்போருக்கு இடையே மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.
சமண சமயத்தினருக்குச் சொந்தமான திருப்பரங்குன்றம் மலையைப் பிற மதத்தினர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல. திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க வேண்டும். மலையை மீட்டெடுத்துப் பராமரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதோடு, அரசு எவ்வித மத பாகுபாட்டையும் காட்ட விரும்பவில்லை. மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையே விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டது. தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலர் தரப்பில், பதில் மனுத் தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்யவும், இந்த வழக்கை திருப்பரங்குன்றம் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகளோடு சேர்த்துப் பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்