புதுச்சேரி: முறைப்படி அறிவித்து விரைந்து முடியாத தண்டவாளம் சீரமைப்பு பணிகளால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சூழலில் விரைந்து தீர்வு காணாவிட்டால் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று எம்எல்ஏ அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைந்துள்ள ஏஎப்டி மில் கிராசிங், புவன்கரே வீதி ரயில்வே கிராசிங் அப்பகுதிகளில் தண்டவாளம் மாற்றி விரைந்து சீரமைப்பு பணி முடிக்காததால் அதை கடக்கும் வாகன ஓட்டிகள் குறிப்பாக பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பழைய தண்டவாளங்களை மாற்றி புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணி புதுச்சேரியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
புதுச்சேரி கடலூர் சாலையில் தற்காலிக பஸ் நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள ஏஎப்டி ரயில்வே தண்டவாளம் கடந்த வாரம் சீரமைக்கப்பட்டது. முன் அறிவிப்பு ஏதுமில்லாமல் நடந்த பணியால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தண்டவாளம் சீரமைப்பு பணி அந்தப் பகுதியில் முடிந்த நிலையிலும் வாகன ஓட்டிகள் செல்லும் வகையில் சாலை சீரமைக்கப்படவில்லை. இதே நிலைதான் புவன்கரே வீதி ரயில்வே கிராசிங்கிலும் நீடிக்கிறது.
புதிய தண்டவாளம் பதித்து சிமெண்ட் ஸ்லாப்புகள் சரி வர மூடப்படாமல் இருப்பதால் புதுச்சேரி - கடலூர் சாலையில் தண்டவாளத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தண்டவாளம் பகுதியில் கருங்கற்களும் சிலாப்புகளும் சிதறி கிடக்கின்றன. இதில் பெண் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி தவிக்கின்றனர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுடன் செல்லும் பெண்கள், வயதானவர்கள் என பலரும் தண்டவாளத்தைக் கடக்க கஷ்டப்படுகின்றனர்.
இதனால் இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில முதியவர்கள் டூவீலர்களில் இருப்பதில் கடக்க முடியாமல் தவறி விழுந்துள்ளனர். பக்கத்தில் தற்காலிக பேருந்து நிலையம் இருப்பதால் அதிக வாகனங்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றன. சில வாகன ஓட்டிகளுக்கு பஸ் நடத்துனர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் தண்டவாளத்தை கடக்க உதவுகின்றனர்.
ரயில் மறியல் போராட்டம் - எம்எல்ஏ அறிவிப்பு
இதையடுத்து, இப்பகுதியைச் சேர்ந்த புதுவை உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு இன்று கூறுகையில், "புதுவை- கடலூர் ரோடு, முதலியார்பேட்டை ரோடியார் மில் ரயில்வே கிராசிங், புவன்கரே வீதி ரயில்வே கிராசிங் கேட் பகுதிகளில் ரயில்வே துறை சார்பாக பழுது பார்க்கும் பணிகளால் சாலை பகுதிகளை உடைத்துள்ளனர். இதனால் ரயில்வே கிராசிங்கின் சாலை பகுதிகள் குண்டும், குழியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். விபத்துகளும், நெரிசலும் ஏற்படுகிறது. ரயில்கள் வந்து செல்லும் நேரத்தில் பொதுமக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகின்றனர்.
அங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீஸார் பணியில் இருப்பதில்லை. பொதுமக்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் காவல் துறை கண்டுக் கொள்ளாமல் இருப்பது கண்டிக்கதக்கது. போக்குவரத்து காவல்துறையும், ரயில்வே துறையும் இணைந்து செயல்பட்டு 2 நாட்களில் இதற்கு தீர்வு காணாவிட்டால் பொதுமக்களை திரட்டி பொது நல அமைப்புகள் சார்பாக ரயில் மறியல் போராட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும்" என்று எம்எல்ஏ நேரு கூறினார்.