புதுவையில் மதுபானக் கொள்கையை கைவிடக் கோரி பிப்.18-ல் இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மதுபானக் கொள்கையை கைவிடக் கோரி வரும் பிப்ரவரி 18-ல் கலால்துறை முன்பு போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் புதிய மதுபானத் தொழிற்சாலைகள், பார்கள் தேவையில்லை என்று வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் சலீம் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு அமைச்சரவை கூட்டத்தில் புதிய மதுபான கொள்கைக்கான முடிவை எடுத்துள்ளது. புதிய மதுபானக் கடைக்கு உரிமம் அனுமதி, புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி, மதுபான விலை ஏற்றம் ஆகிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சுமார் 800 மதுபான கடைகளும், 200-க்கும் புதிய ரெஸ்டோ பார்களும் உள்ளது. திரும்பிய பகுதியெல்லாம் மதுபான கடைகள் அதிகரித்துள்ளன. இதனால் சமூக விரோத குற்றம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும் புதிய மதுபான கடைகள் திறக்கப்பட்டால் புதுச்சேரி சமூகத்துக்கு பெரும்கேடு வரும். புதிய மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் திறந்தால் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்.

இதனால் விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். குடிநீர் பஞ்சம் ஏற்படும். நிலத்தடி நீரில் டிடிஎஸ் அளவு குறையும். புதிய மதுபான கொள்கையால் ரூ.500 கோடி திரட்டி காமராஜர் கல்விக் கடன் உட்பட பல சமூக நலத் திட்டங்களுக்கு செலவிடப்படும் என்ற கூற்று அபத்தமானது. இது காமராஜருக்கு முதல்வர் செய்யும் துரோகம். புதிய மதுபானக் கொள்கையை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும். இதை கைவிடக்கோரி வரும் 18ல் கலால்துறை முன்பு போராட்டம் நடத்தவுள்ளோம்.

புதிய பார்கள் தேவையில்லை. புதிய மதுபான தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு தேவையில்லை. அதற்கு பதிலாக புதுச்சேரிக்கு ஜவுளி பூங்கா திட்டம் கொண்டு வரவேண்டும். அதற்று திட்டத்தை மத்திய அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும். உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு நடவடிக்கையே எடுக்கவில்லை. தங்கள் பையை நிரப்பவே இதை கொண்டு வருவதால் மக்களுக்கு கெடுதான்.

இதில் இண்டியா கூட்டணி கட்சிகளுக்கும் மாற்று கருத்து இல்லை. அதேபோல் மருத்துவ உயர் கல்வியில் இருப்பிடம் சார்ந்த இடஒதுக்கீடு கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும். சைபர் பாதுகாப்புக் கொள்கையை உடன் உருவாக்க வேண்டும்" என்று சலீம் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், மாநில துணைச்செயலர் சேது செல்வம், மூத்த தலைவர் அபிஷேகம், தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE