திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், தமிழக அரசின் அலட்சியத்தால் தான் இஸ்லாமியர்களின் வழிபாடு, சட்டப் பிரச்சினையாக மாறியுள்ளது என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”வக்பு வாரிய திருத்த சட்டத்தைக் கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இந்த திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக உரிமை மீட்பு மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம். திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்- இந்துக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
தமிழக அரசின் அலட்சியத்தால் இஸ்லாமியர்களின் வழிபாடு, சட்டப் பிரச்சினையாக மாறியுள்ளது. நீதிமன்றம் என்ன கூறியதோ, அதன்படியே இல்லாமிய மக்கள் நடந்து வருகின்றனர். இப்பிரச்சினையில் அமைதி நிலவ வேண்டும். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சிறுபான்மை அமைப்புகளை அச்சப்படுத்துகின்றன” இவ்வாறு அவர் கூறினார்.