“டெல்லி தேர்தல் முடிவு இண்டியா கூட்டணிக்கு படிப்பினை” - முத்தரசன் கருத்து

By KU BUREAU

சென்னை: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு இண்டியா கூட்டணிக்கு படிப்பினை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலளார் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கட்சி வரலாற்றுப் பேரவைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தான் பாஜகவால் பெரும்பான்மை பெற முடியவில்லை. ஆனால், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் தனித்தனி அணியாகப் போட்டியிட்டன. இவர்களின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம், பாஜக பெற்ற வாக்கு சதவீதத்தைவிட அதிகம். எனவே, ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் பாஜகவை வீழ்த்தி இருக்கலாம்.

நோக்கத்தை மறந்துவிட்டு, யார் பெரியவர் என்ற சுயகவுரவம் பார்த்ததன் விளைவுதான் டெல்லி தேர்தல் முடிவில் பிரதிபலித்துள்ளது. காங்கிரஸ் கட்சி, கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் சென்று, அவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். இண்டியா கூட்டணிக்கு டெல்லி தேர்தல் முடிவு, ஒரு படிப்பினை. இந்த முடிவை வைத்து மக்களின் ஆதரவு பாஜகவுக்கு சென்றுவிட்டது என கூற முடியாது. பெரியாரை பாஜகவால் நேரடியாக விமர்சனம் செய்ய முடியவில்லை. எனவே, பெரியாரை விமர்சிக்க சீமானைப் பயன்படுத்தினர்.

ஆனால், சீமானின் நடவடிக்கையை கண்டித்து பலர் அக்கட்சியிலிருந்து வெளியேறினர். தமிழகத்தில் காலூன்ற பல்வேறு முயற்சிகளை, சர்ச்சைகளை பாஜக மேற்கொள்கிறது. ஆனால், அந்த முயற்சி தமிழகத்தில் ஒருபோதும் வெற்றிபெறாது. பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு” இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE