ஈரோடு கிழக்கு வெற்றி என்பது சட்டப்பேரவை தேர்தலுக்கான தொடக்க வெற்றியாகும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

By KU BUREAU

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியானது, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொடக்க வெற்றியாகும் என் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம்: திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, கட்சியை தோளிலும், தொண்டர்களை நெஞ்சிலும் சுமந்துகொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் எதிர்கொண்ட தேர்தல் களங்களில் எல்லாம் வெற்றியன்றி வேறில்லை என்கிற வகையில் தொடர்ச்சியான வெற்றியைத் திமுக பெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளைக் கட்சி நிர்வாகிகளும், கூட்டணி கட்சியினரும் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் திமுக அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், அவை உரிய முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஆய்வுப் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.

நெல்லை மாவட்டத்துக்கு மேற்கொண்ட பயணம் எல்லையில்லா மகிழ்ச்சியை எனக்கு அளித்தது. “அப்பா.. அப்பா..” என்று மாணவிகள் காட்டிய பாசத்தின்போது, அவர்களுக்கு நான் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்து, தமிழக மக்களின் முன்னேற்றம்தான் திமுக ஆட்சியின் ஒரே லட்சியம் என்ற மன உறுதியையும் பெற்றேன். இந்த வேளையில்தான் இடைத்தேர்தல் களத்திலிருந்து இனிப்பான வெற்றிச் செய்தி வந்து கொண்டிருந்தது.

இடைத்தேர்தலை சட்டப்பேரவையின் முதன்மை எதிர்க்கட்சியான அதிமுகவும், அது மறைமுகக் கூட்டணி வைத்திருக்கும் பாஜகவும் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, உதிரிகளை முன்னிறுத்தித் திமுகவை எதிர்த்தன. மக்களுக்குத் தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், மகத்தான தலைவர் பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசிய கைக்கூலிகளுக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். இது என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

நான் நேரடிப் பிரச்சாரத்துக்கு வர இயலாதபோதும், திமுகவுக்கு மகத்தான வெற்றியை வழங்கிய வாக்காளர்களுக்கு, வெற்றிக்காக உழைத்த அமைச்சர் முத்துசாமி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும், வேட்பாளர் சந்திரகுமாருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘200 இலக்கு’ என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைந்திருக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள்.

அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திமுக அரசு, மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது. எனினும், சட்டத்தின் வழியே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் திமுக முன்னணியில் இருக்கும். அதற்கான நம்பிக்கையை ஈரோடு கிழக்குத் தொகுதியின் வெற்றி நமக்கு அளித்திருக்கிறது. இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் வகையில் திமுக அரசின் செயல்பாடுகள் அமையும்.

அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்.21, 22 தேதிகளில் கடலூர் மாவட்டத்துக்குப் பயணிக்க இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE