“விஜய் எங்கள் வீட்டு பையன், ஆனால்...” - பிரேமலதா விஜயகாந்த் சுளீர்

By KU BUREAU

மதுரை: அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் அறைக்குள் அமர்ந்திருக்காமல், வீதிக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாகத்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறும் முதல்வர் ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்ன செய்தார்?

தமிழகத்தில் குழந்தைகள், மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு டாஸ்மாக் மதுக் கடைகள், கஞ்சா புழக்கமே முக்கியக் காரணம். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவோருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்.

விஜய் எங்கள் வீட்டு பையன். அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அறைக்குள் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யாமல், வீதிக்குச் சென்று மக்களை சந்திக்க வேண்டும். இது குறித்து நேரிலேயே அவரிடம் தெரிவித்திருக்கிறேன்.
சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்த அவரை பாராட்ட வேண்டும். அவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதை அறிய நாங்களும் காத்திருக்கிறோம்.

திருப்பரங்குன்றத்தில் இந்து, முஸ்லிம்கள் அண்ணன், தம்பிகளாக பல ஆண்டுகளாக வாழ்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக இல்லாத பிரச்சினை தற்போது ஏன் வருகிறது? இதற்குப் பின்னால் முற்றிலும் அரசியல் இருக்கிறது. மதம், சாதியை பிரித்து அரசியல் செய்யப் பார்க்கின்றனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE