ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போதுவரை திமுக வேட்பாளர் சந்திரகுமார் 26,382 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 4,087 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மா.கி.சீதாலட்சுமி என மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு நிறைவில், 74 ஆயிரத்து 260 ஆண்கள், 80 ஆயிரத்து 376 பெண் வாக்காளர்கள், 21 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவீதம் 67.97 ஆக இருந்தது. இத்துடன், தபால் வாக்குகள் 251 பதிவாகி உள்ளது.
» டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பெரும்பான்மை பெறுகிறது பாஜக; முட்டி மோதும் ஆம் ஆத்மி!
» தங்கம் விலை இன்று 120 ரூபாய் உயர்வு: ஒரு கிராம் ரூ.7,945க்கு விற்பனை!
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஈரோடு கிழக்கில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம், 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.