ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் வெடிகுண்டுகளை கைமாற்றியதாக கைதான வழக்கறிஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி

By KU BUREAU

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கைமாற்றியதாக கைதான வழக்கறிஞரின் ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதித்து, அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்காக வெடிகுண்டுகளையும் கொலையாளிகள் தயாரித்து வைத்திருந்துள்ளனர். ஆனால், அதை பயன்படுத்தவில்லை என தகவல் வெளியானது.

வெடிகுண்டு கைமாற்றல்: இந்த வழக்கில் 17-வது நபராக கைதான வழக்கறிஞர் ஹரிஹரன், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் இந்த வெடிகுண்டுகளை மற்ற நபர்களிடம் கைமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில். கடந்த 112 நாட்களாக சிறையில் உள்ள ஹரிஹரனுக்கு ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்: இந்நிலையில், இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹரிஹரன் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், தனது ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும்’

என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE