ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில், இந்தியா, இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பர். நடப்பாண்டு வரும் மார்ச் 14, 15-ம் தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற உள்ளது. இது தொடர்பாக இலங்கை யாழ்ப்பாணத்தில் நேற்று கச்சத்தீவு திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெபரத்தினம், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கை கடற்படை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வரும் மார்ச் 14-ம் தேதி மாலை 4 மணியளவில் கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து, திருச்ஜெபமாலை, இரு நாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மார்ச் 15-ம் தேதி காலை 7.30 மணியளவில் சிறப்புத் திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. இதையடுத்து, கொடியிறக்கத்துக்குப் பின்னர் திருவிழா நிறைவடையும். இந்த விழாவில் 4,000 இலங்கை, 4,000 இந்திய பக்தர்கள் என மொத்தம் 8,00 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.