புதுச்சேரி: புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வேளாண் மற்றும் மலர், காய், கனிக்காட்சி இன்று தொடங்கியது.
புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில் வேளாண் விழா-2025 மற்றும் 35-வது மலர், காய், கனிக்காட்சி இன்று (7-ம் தேதி) தொடங்கி வரும் 9-ம் தேதி வரை தாவரவியல் பூங்காவில் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா இன்று மாலை நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வேளாண் விழா மற்றும் மலர், காய், கனிக்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.
சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, கல்யாணசுந்தரம், அரசுச் செயலர் (வேளாண்மை) நெடுஞ்செழியன், துறை இயக்குநர் வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
» புழல் சிறையில் சோப்புக்குள் மறைத்து வைத்து கைதிகளுக்கு கொடுக்க முயன்ற 31 கிராம் கஞ்சா பறிமுதல்!
» போதை கலாச்சாரத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: பிரேமலதா கோபம்
இக்கண்காட்சியில் புதுச்சேரி அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை காண வரும் பார்வையாளர்களை கவரும் விதமாக மலர்களால் பல்வேறு விலங்குகள், பறவைகள் போன்று தத்ரூபமாக உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வீரிய காய்கறிகளின் ரகங்கள், வீரிய கனிகளின் ரகங்கள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் அரங்குகள், வேளாண் தொழில்நுட்ப கருத்தரங்குகள், மலர் ரங்கோலி, தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள், பிரதான தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தியாளர்களின் விற்பனை அரங்குகள், இசை நடன நீரூற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து குழந்தைகளுக்காக சிறுவர் உல்லாச ரயிலும் இயக்கப்படுகிறது. இன்று தொடங்கிய இந்த வேளாண் விழா மற்றும் 35-வது மலர், காய்கனி கண்காட்சி இரவு 9 மணி வரை நடைபெற்றது. நாளையும் (8-ம் தேதி) மற்றும் நாளை மறுநாளும் (9-ம் தேதி) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடக்கிறது.
கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை பழைய பேருந்து நிலையம் நகராட்சி வளாகத்திலும், நான்கு சக்கர வாகனங்களை பழைய துறைமுகப் பகுதியிலும், அண்ணா திடலிலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயனுள்ள வழிகாட்டுதலுக்காக வாகன நிறுத்துமிடங்களுக்கான கியூஆர் கோடு முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.