அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்: டி.ராஜா வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் காலில் சங்கிலியால் கட்டி விமானத்தில் அழைத்து வரப்பட்டதைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, ”அம்பேத்கருக்கு எதிராக பாஜக, ஆர்எஸ்எஸ் பேசி வருகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் சேர்ந்து மத ரீதியான மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இந்திய பொருளாதாரம் தனியார்மயம் ஆக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக செயல்படுகிறது. பெரு முதலாளிகளிடம் பொதுத் துறை நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

வேலை இல்லாத திண்டாட்டம், விலைவாசி, பண வீக்கம் அதிகரித்து உள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து உள்ளது. அந்நிய செலாவணி கடன் அதிகரித்து உள்ளது. இப்பட்ஜெட் ஏழைகளை வஞ்சித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் காலில் சங்கிலியால் கட்டி விமானத்தில் அழைத்து வரப்பட்டதைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியர்களை அவமானப் படுத்தியது, இந்தியாவை அவமானப் படுத்தியது போல் ஆகும். இந்தியா இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்” என்று டி.ராஜா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE