ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தொடர் போராட்டம் - ஆட்சியர் அளித்த உறுதி!

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் 4 மாதங்களில் வேறு இடம் தேர்வு செய்து மாற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் அருகேயுள்ள அழகன் குளம் ஊராட்சி நாடார்வலசையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி, அக்கிராம மக்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த டாஸ்மாக் கடை முன்பு ஜனவரி 30ம் தேதி இரவு வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றிரவு அதிகாரிகள் மாற்று இடம் பார்க்கும் வரை கடை திறக்கப்படாது என உறுதியளித்ததால் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பிப்.5ம் தேதி கடை திறக்கப்பட்டதால், அன்று மதியம் ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் மாற்று இடம் தேர்வு செய்து, கடை மாற்றப்படும் என தெரிவித்தார். அதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன் பின் நேற்று (பிப்.6) நாடார்வலசை டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்த பொதுமக்கள் திரண்டனர்.

அவர்களை தேவிபட்டினம் போலீஸார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர். இந்நிலையில் இன்று நாடார்வலசை கிராம மக்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆட்சியர், இன்னும் நான்கு மாதங்களுக்குள் வேறு இடம் தேர்வு செய்து கடைமாற்றப்படும். அதுவரை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இது குறித்து கிராம மக்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "ஏற்கனவே அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகள் ஆட்சியருக்கு தெரியாது என்றும், உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற முடியாது. இன்னும் 4 மாதங்களுக்குள் வேறு இடம் தேர்வு செய்து, அங்கு கட்டிடம் கட்டிய பின்கடை மாற்றப்படும். பொதுமக்களே வேறு இடத்தையும் தேர்வு செய்து கொடுக்கலாம் என கூறினார்.

தமிழக அரசு டாஸ்மாக் வருமானத்தை நம்பி தான் உள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக பெண்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள நாடார்வலசை டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்” என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE