சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் தமிழ்நாட்டை புறக்கணித்து, மக்களை வஞ்சித்துள்ள மக்கள் விரோத மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நாளை நடைபெறும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இம் மாதம் முதல் தேதி (01.02.2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
குறிப்பாக புதிய ரயில் பாதைகள், இரட்டை வழித்தடமாக மேம்படுத்துதல், மேம்பாலங்கள், முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை உட்பட செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் எதற்கும் போதிய நிதி ஒதுக்கவில்லை. தொடர்ந்து இயற்கை பேரிடர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் சொந்த நிதி ஆதாரத்தில் நிவாரணப் பணிகளும், மறுவாழ்வு, மறுசீரமைப்பு செய்த வகையில் பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ரூ.39 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என முதல்வர் பல முறை கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் முறையிட்டதை நிதி நிலை அறிக்கை கருத்தில் கொள்ளவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய பாக்கி, சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தை செயல்படுத்த வழங்க வேண்டிய நிதி என ஏராளமான நிதி பாக்கி வழங்க வேண்டும் என்பதை பட்ஜெட் கருத்தில் கொள்ளவில்லை.
ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்து, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் நாளை (08.02.2025) பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம் நடத்துகிறது. சென்னையில் பூக்கடை அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெறும் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டத்தை கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா தொடக்கி வைக்கிறார்.
மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நீங்கலாக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆங்காங்கு நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். தமிழக மக்கள் உணர்வை பிரதிபலிக்கும் இந்தப் போராட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்று ஆதரிக்குமாறு கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.