குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி லோடுமேன் மரணம்: பொறியாளருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

By KU BUREAU

சென்னை: 2018ம் ஆண்டு கார் மோதி, வாகனத்தில் பயணித்த லோடு மேன் இறந்த விபத்து வழக்கில் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் நிறுவன பொறியாளருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், "சென்னை, பல்லாவரம், ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் இருதயநாதன் (48). இவர் டாடா ஏஸ் வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு 31ம் தேதி அன்று இருதயநாதன் ஆட்டோவில் லோடுமேன் பாஸ்கர் (51) மற்றும் மோகன் ஆகிய இருவரை ஏற்றிக்கொண்டு ராஜீவ் காந்தி சாலையில் கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த போது, சிபிடி பாலிடெக்னில் இருந்து அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த கார் மேற்படி டாடா ஏஸ் வாகனத்தின் பின்புறம் இடித்ததில் டாடா ஏஸ் வாகனம் நிலை தடுமாறி மரத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த லோடுமேன் பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்து அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் ஐபிசி மற்றும் மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், தரமணி 4ம் தெருவை சேர்ந்த ஶ்ரீகாந்த் பாரி (24) என்பவர் குடிபோதையில் காரை இயக்கி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. இதன் பேரில் ஶ்ரீகாந்த் பாரி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ஶ்ரீகாந்த பாரி தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருவது தெரியவந்தது.

இவ்வழக்கு, போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 1-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டும், தடயங்கள் சேகரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு இறுதி தீர்ப்பு பிப்ரவரி 5ம் தேதி அன்று வழங்கப்பட்டது. மேற்படி வழக்கில் எதிரி ஶ்ரீகாந்த் பாரி மீது குற்றம் நிரூபிக்கப் பட்டதால், மேற்படி குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றம் ரூ.15,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் ஆளிநர்களை, காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE