சென்னை: நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு நிறைவில் விவசாயிகள் பேரணி, மாநாடு நடத்த வேண்டும் என தமிழக அரசை பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்காக போராடி வரலாறு படைத்த நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டை முன்னிட்டு, ‘துடியலூர் - கோவில்பாளையம் இணைப்பு சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி ரயில்வே மேம்பாலத்துக்கு நாராயணசாமி நாயுடு பெயர் சூட்டப்படும்.
அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாராயணசாமி நாயுடுவை ஒரு விவசாய சங்கத் தலைவர் என்ற அளவில் மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. அறவழியில் போராடி விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுத்த புரட்சியாளர் அவர்.
இன்று விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது என்றால், அதற்கு நாராயணசாமி நாயுடு நடத்திய போராட்டங்கள்தான் காரணம். தமிழகத்தில் இத்தனை விவசாய சங்கங்கள் இருக்கிறது. விவசாய பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். போராடுகிறார்கள் என்றால் அதற்கு நாராயணசாமி நாயுடு நடத்திய போராட்டங்கள்தான் காரணம்.
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ பிப். 07, 2025
» அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: முதல்முறை போட்டி தேர்வு
எனவே, அவரது நூற்றாண்டையொட்டி நினைவு வளைவு அமைப்பது, ரயில்வே மேம்பாலத்துக்கு பெயர் வைப்பதோடு மட்டும் நின்று விடாமல், அவரது வாழ்க்கை வரலாற்றை, போராட்ட குணத்தை, தமிழக மக்களிடம் குறிப்பாக, விவசாயிகள், இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காக தமிழகம் முழுவதும் கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்த வேண்டும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நாராயணசாமி நாயுடு குறித்த பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்த வேண்டும். அவரது நூற்றாண்டு நிறைவில் மிகப்பெரிய விவசாயிகள் பேரணியுடன், மாநாட்டையும் தமிழக அரசு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.