ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவீர்களா? - பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி

By KU BUREAU

மலிவான அரசியல் செய்வதை விடுத்து, ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக பழனிசாமி செயல்படுவாரா என்று அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப்பதிவில் நேற்று பதிவிட்டிருப்பதாவது: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் வளையமாதேவியில் டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வீடியோ ஒன்று வெளியானது. அதை பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு ‘அய்யகோ, திமுகவைப் பாருங்கள்’ என்று எழுதியிருந்தார்.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்ததில், வீடியோவை வெளியிட்டது அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க வட்டச் செயலாளராக இருந்த ராஜாவின் உறவினரான ரவி என்பதும், அவருக்கு கள்ளச்சாராயம் வாங்கி வந்து கொடுத்ததே அதிமுகவைச் சேர்ந்த ராஜாதான் என்பதும் தெரியவந்துள்ளது. அதிமுக பிரமுகர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுகளான அண்ணா நகர் பாலியல் வழக்கு, காரில் திமுக கொடிகட்டிய ரவுடிகள் தொடங்கி நேற்றைய கள்ளச்சாராய வீடியோ வரை குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அடுத்த நாளே அவர்கள் அதிமுகவினர் எனத் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவசரம் அவசரமாக பழனிசாமி ‘ ட்வீட்’ செய்வதும், அதை அதிமுகவினர் பரப்புவதும், உண்மை வெளியானவுடன் அமைதி காப்பதும் என ஒரே மாதிரியான அஜெண்டாவுடனேயே பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்பது அரசியலில் முக்கியமான பொறுப்பு. ஆனால், சொந்தக் கட்சியினர் ஒரு குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தால் உடனே அரசை குறை கூறி ஓர் அறிக்கையை வெளியிட்டு, அந்த சம்பவத்தையே திசை மாற்றி மக்களை குழப்பம் பணியைத்தான் அவர் செய்து வருகிறார். ஒருவேளை ‘செட்டிங்’ செய்கிறார்களோ என்றும் சந்தேகம் வருகிறது. இப்படிப்பட்ட மலிவான அரசியல் செய்வதை விடுத்து, பழனிசாமி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE