அரசு நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே பட்டாசு ஆலை விபத்துக்களுக்கு காரணம்: சிபிஎம் குற்றச்சாட்டு

By KU BUREAU

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் தொடர் பட்டாசு விபத்துக்களை தடுத்திடவேண்டும். அரசு நிர்வாகமும், ஆலை உரிமையாளர்களின் மெத்தனப்போக்கும் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதற்கு முக்கியமான காரணமாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விருதுநகர் மாவட்டம் சின்னவாடி ஊராட்சி, தாதப்பட்டி கிராமத்தில் பிப்ரவரி 5ம் தேதி அன்று தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் தொழிலாளி ராம லெட்சுமி என்பவர் உயிரிழந்துள்ளதும், 6 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் பெரும் வேதனையான சம்பவமாகும். இந்த விபத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளியின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதில் தொழிலாளர்கள் உயிரிழப்பதும், படுகாயங்கள் ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் கறாராக கடைபிடித்தால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதை தடுக்க முடியும். ஆனால், அரசு நிர்வாகமும், ஆலை உரிமையாளர்களின் மெத்தனப்போக்கும் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

எனவே, இனி வரும் காலங்களில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்தை தடுப்பதற்கு அரசின் விதிமுறைகளை கறாராக கடைபிடிக்கப்படுவது, பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் இருப்பது உள்ளிட்டவற்றை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை போதுமானதல்ல.

எனவே, பட்டாசு ஆலைகளில் உயிரிழக்கும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஆலை நிர்வாகம் ரூ.10 லட்சமும், அரசு நிர்வாகம் ரூ.20 லட்சமும் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு தரமான உயர் தர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை உடனடியாக அரசாணை வெளியிட்டு அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறது” என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE