சென்னை: ராமநாதபுரம் நாடார் வலசையில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களின் நலனைக் காட்டிலும் டாஸ்மாக் வருமானம் தான் அரசுக்கு முக்கியமா என எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம் நாடார் வலசை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அப்பகுதியில் வழிபாட்டுத்தலம் மற்றும் பள்ளிக் கூடம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூட வலியுறுத்திக் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். கிராம மக்களின் போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியும் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் களத்தில் நின்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் வட்டாட்சியர், ஆர்டிஓ மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒருவார காலமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையானது திடீரென திறக்கப்பட்டு மதுபான விற்பனை செய்யப்பட்டதை அறிந்த அப்பகுதி பெண்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், டாஸ்மாக் கடையை மூடுவதாக அறிவித்து ஏமாற்றிய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் இன்று மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்தனர்.
ஆனால், ஜனநாயக வழியில் போராடிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை அராஜகமாகக் கைது செய்துள்ளது. மட்டுமின்றி, சட்டத்திற்குப் புறம்பாக அவர்களின் கைப் பேசிகளையும் பறித்துள்ளது. மக்கள் நலனைக் காட்டிலும் டாஸ்மாக் வருமானத்திற்கு முக்கியத்துவம் அளித்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அராஜக கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.
» சாதிவாரி கணக்கெடுப்பு; தற்போதைய ஆட்சியாளர்களின் பொய்வேடம் தானாக கலையும் : விஜய் அதிரடி அறிக்கை
உடனடியாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதோடு, குழந்தைகளையும் கைது செய்து சிறை வைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், வாக்குறுதிப்படி அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையைத் தமிழக அரசு நிரந்தரமாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று நிஜாம் முகைதீன் தெரிவித்துள்ளார்.