சென்னை: புழல் அருள்மிகு திருமூலநாதசுவாமி திருக்கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (06.02.2025) சென்னை, புழல், அருள்மிகு திருமூலநாதசுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
2024-2025ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையில், ”பக்தர்களுக்கு ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் இவ்வாண்டு மேலும் 6 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை, மதுரவாயல், அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில், புழல், அருள்மிகு திருமூலநாத சுவாமி திருக்கோயில், திருச்சி மாவட்டம் லால்குடி, அருள்மிகு பிடாரி அய்யனார் திருக்கோயில், பெரம்பலூர், அருள்மிகு அபராதரட்சகர் திருக்கோயில். திருப்பூர் மாவட்டம், காரத்தொழுவு, அருள்மிகு அழகுநாச்சியம்மன் திருக்கோயில், கடலூர் மாவட்டம், தென்னம்பாக்கம், அருள்மிகு அழகர் திருக்கோயில் ஆகிய 6 திருக்கோயில்களில் தினந்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டது.
» சிவகங்கை காவல் நிலைத்தில் புகுந்து பெண் ஆய்வாளர் மீது விசிகவினர் தாக்குதல்: தினகரன் கடும் கண்டனம்
சென்னை, புழல், அருள்மிகு திருமூலநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (06.02.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள 13 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 764 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 3.5 கோடி பக்தர்கள் பயன்பெற்று வருவதோடு இதற்காக ரூ.120 கோடி செலவிடப்படுகிறது.
இந்நிகழ்வின்போது, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், இணை ஆணையர்கள் சி.லட்சுமணன், ஜ.முல்லை, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் எஸ்.நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.