திருச்சி: வயலூர் முருகன் கோயிலில் புதிதாக கட்டப்பட்டு வந்த 'ஆர்ச்' இடிந்து விழுந்தது - பக்தர்கள் அதிர்ச்சி

By KU BUREAU

திருச்சி: வயலூர் முருகன் கோயில் குடமுழுக்குக்காக புதிதாக கட்டப்பட்டு வந்த அலங்கார நுழைவு வளைவு திடீரென இடிந்து விழுந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி அருகே குமார வயலூரில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. அருணகிரி நாதர் வழிபட்ட சிறப்பு மிக்க இக்கோயிலில் குடமுழுக்குக்காக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் பிப்ரவரி 19ம் தேதி குடமுழுக்கு நடக்கவிருக்கிறது. இதற்காக வயலூர்- அதவத்தூர் சாலை நுழைவாயிலில், புதிதாக, சுமார் 25 அடி உயரம், 70 அடி அகலத்திற்கு சிமெண்ட்டால் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு வருகிறது.

தனியார் ஒப்பந்தக்காரர் மூலம் மேற்கொள்ளப்படும் இப்பணியில், 10-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டு வந்தனர். மதியம், ஒரு மணி அளவில் சிமெண்ட் வளைவு அடியொடு பெயர்ந்து, சாரத்துடன் சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக, தொழிலாளர்கள் சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவசர கதியில், தரமில்லாத பணிகளை மேற்கொண்டதால் தான் ஆர்ச் இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து, சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், நுழைவு வளைவு இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE