சென்னை: கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் மாணவிகளுக்கான பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு பள்ளியில் 13 வயதிற்குட்பட்ட மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கதக்கது. இச்சம்பவத்தில் மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்கும் வகையில் தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதோடு பாதுகாப்பும் இருக்கும் வகையில் செயல்பட வேண்டுமே தவிர ஆசிரியர்களே வன்ம செயலில் ஈடுபட்டது ஆசிரியர் சமூகத்திற்கே மிகப் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழக அரசு பள்ளி கல்லூரி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.