ஸ்ரீவில்லி. அரசு கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி மாணவர்கள் மறியல்

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரியில் இருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி புதன்கிழமை மாலை கல்லூரி முன் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 2020-ம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மொட்டமலை பகுதியில் ரூ.11 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அங்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கல்லூரியில் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரிக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து தலா இரு அரசு பேருந்துகளும், வத்திராயிருப்பில் இருந்து ஒரு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணித்து வரும் நிலை உள்ளது. நேற்று மாலை கல்லூரியில் இருந்து மாணவர்களை கிளம்பிய பேருந்தில் பயணித்த மாணவர் கல்லூரி சுற்றுச்சுவரில் உரசி காயமடைந்தார்.

இந்நிலையில் இன்று மாலை கல்லூரிக்கு வந்த பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கும் அளவுக்கு ஏறிய பின்னரும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் ஏற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கல்லூரியில் இருந்து ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தலா ஒரு பேருந்து கூடுதலாக இயக்க வேண்டும் எனக்கூறி பேருந்துகளை சிறை பிடித்து மாணவர்கள் கல்லூரி முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE