கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவுக்கு பைபர் படகுகளை அனுமதிக்க கோரி  ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் நடைபெற உள்ள புனித அந்தோணியார் திருவிழாவிற்கு பைபர் படகுகளை அனுமதிக்க வேண்டும், என வலியுறுத்தி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் எதிரே கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல பைபர் படகுகளை அனுமதிக்க வேண்டும், என வலியுறுத்தி புதன்கிழமை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பாரம்பரிய நாட்டுப்படகு சங்க தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் பிரின்சோ ரைமண்ட் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ராமேசுவரத்தில் உள்ள கடற்கரை கிராமங்களான வேர்க்கோடு, ஓலைக்குடா, செம்மமடம், நொச்சிவாடி,தென்குடா, அரியாங்குண்டு, தண்ணீர்ஊற்று, தங்கச்சிமடம், அக்காள் மடம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் அளித்த மனுவின் விவரம் வருமாறு, '1913ம் ஆண்டில் ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோணிப் பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியைச் சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத்தீவில் மீனவர்களின் பாதுகாவலரான அந்தோணியாருக்கு ஆலயம் ஓலைக்குடிசையில் கட்டப்பட்டது. கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும் பெருமளவு மீன் கிடைக்கவும் இங்கு நாட்டுப் படகுகளில் சென்று மீனவர்கள் வேண்டிக் கொள்வோம்.

மேலும் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவிற்கும் கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகில் சென்று வந்து கொண்டிருக்கின்றோம். தற்போது காலத்திற்கு ஏற்ப நவீன முறையில் இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளுக்கு நாங்கள் மாறிவிட்டோம்.

பைபர் படகில் கச்சத்தீவு திருவிழா செல்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதற்கேற்ப எதிர்வரும் மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு ராமேசுவரம் ஓலைக்குடா அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்,' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE