அறிவிக்கப்படாத ஆவின் பால் விற்பனை விலை உயர்வு திணிப்பு: பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் புகார்

By KU BUREAU

சென்னை: அறிவிக்கப்படாத ஆவின் பால் விற்பனை விலை உயர்வை திணிக்கும் மொத்த விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவின் நிர்வாக இயக்குனர் வினித் ஐஏஎஸ் அவர்களிடம் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி நேரில் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பாலுக்கு 2025 பிப்ரவரி 1ம் தேதி முதல் அறிவிக்கப்படாத விலை உயர்வை ஒரு டப்புக்கு (12 லிட்டர் பால் பாக்கெட்) கூடுதலாக 3 ரூபாய் பால் முகவர்களிடம் கட்டாயப்படுத்தி தான் வசூலிப்பதோடு பிற மொத்த விநியோகஸ்தர்களையும் தன்னோடு கூட்டு சேர்த்துக் கொண்டு பால் முகவர்களை மிரட்டி வரும் தென் சென்னை ஆவின் மொத்த விநியோகஸ்தர் புஷ்ப ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவின் நிர்வாக இயக்குனர் வினித் ஐஏஎஸுக்கும், தமிழக முதல்வருக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே (3.01.2025, 01.02.2025) மின்னஞ்சல் மற்றும் பதிவுத் தபால் வாயிலாக புகார் மனு அனுப்பியிருந்தோம்.

ஆனால் சம்பந்தப்பட்ட மொத்த விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத சூழலில் நிர்ணயிக்கப்படாத விற்பனை விலையை உயர்த்தும் மொத்த விநியோகஸ்தர்கள் குறித்து ஆவின் அதிகாரிகள் தரப்பில் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டிருந்ததை அறிந்து கொண்ட தென் சென்னை மொத்த விநியோகஸ்தர் புஷ்ப ராஜ், ரெடிமேட் கடிதம் தயார் செய்து வைத்துக் கொண்டு அதில் தங்களை புஷ்ப ராஜை மிரட்டி ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கவில்லை என்றும், அவருக்கு ஆவின் பால் விநியோகம் செய்ய போக்குவரத்து செலவு கட்டுபடியாகாத காரணத்தால் பால் முகவர்களாகிய நாங்கள் தான் விருப்பம் கொண்டு டப்புக்கு 3 ரூபாய் கூடுதலாக தருவதாகவும் டைப் செய்து வைத்துக் கொண்டு அந்த கடிதத்தில் கையெழுத்திட்டால் தான் ஆவின் பால் விநியோகம் செய்வோம் என மிரட்டி நிர்பந்தம் செய்ய தொடங்கியிருக்கிறார்.

இதனால் பாதிக்கப்பட்ட பால் முகவர்கள் தரப்பில் இருந்து பால் முகவர்களை மிரட்டி ஆவின் பாலுக்கு கூடுதல் விலை கேட்கும் மொத்த விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (05.02.2025) பிற்பகல் 1.45 மணியளவில் சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆவின் நிர்வாக இயக்குனர் வினித் ஐஏஎஸை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சார்பில் நேரில் சந்தித்து ஆவின் பாலுக்கு அறிவிக்கப்படாத விலை உயர்வை பால் முகவர்களிடம் திணிக்கும் ஆவின் மொத்த விநியோகஸ்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமியின் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பொன்மாரியப்பன், மாநில பொருளாளர் முருகன், மாநில துணைத் தலைவர் பால்துரை, மாநில இணைச் செயலாளர் பவுல் சந்தோசம் ஆகியோர் அடங்கிய மாநில நிர்வாகிகள் புகார் மனு அளித்தோம்.

அப்போது புகார் மனுவை பெற்றுக் கொண்ட நிர்வாக இயக்குநர் வினித் ஐஏஎஸை எங்களிடம் சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் பால் முகவர்களின் குறைகள் குறித்தும், மொத்த விநியோகஸ்தர்களின் அடக்கு முறை குறித்தும் கேட்டறிந்ததோடு சம்பந்தப்பட்ட மொத்த விநியோகஸ்தர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்” என்று பொன்னுசாமி தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE