மத நல்லிணக்கத்துக்காக நாளை திருப்பரங்குன்றத்தில் அணி திரள்வோம்: செல்வப்பெருந்தகை அழைப்பு

By KU BUREAU

சென்னை: மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு நாளை (06.02.2025) திருப்பரங்குன்றத்தில் அணிதிரள்வோம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”அன்று அயோத்தி, இன்று திருப்பரங்குன்றம். அயோத்தியில் கலவரத்தைக் முடித்தவர்கள், அயோத்தி நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தவர்கள் இன்று திருப்பரங்குன்றத்தில் தொடங்க முயற்சிக்கின்றனர். பாஜகவின் சதியை தமிழ்நாடு மக்களுடன் இணைந்து காங்கிரஸ் பேரியக்கம் முறியடிக்கும். மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு நாளை (06.02.2025) திருப்பரங்குன்றத்தில் அணி திரள்வோம்” என அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், சென்னையில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாகப் பேசிய செல்வப்பெருந்தகை, ”மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்காக ஒரு கும்பல் வெளியில் இருந்து மக்களைக் கூட்டி வந்து உள்ளூர் மக்களுக்கு எதிராக இந்தப் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறது. இதனை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. நாளை காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக எங்கள் தலைவர் பெருமக்களோடு திருப்பரங்குன்றம் ஆலய வழிபாடு செய்ய இருக்கிறோம். அதே சமயம் சிக்கந்தர் பாதுஷாவையும் வழிபட இருக்கிறோம். மத நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளோம்.

தமிழக அரசு இதுபோன்ற சம்பவங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்புகள் பாஜகவின் துணையோடு தமிழகத்தை கலவர பூமியாக்க நினைக்கிறார்கள். அயோத்தியில் கலவரத்தை முடித்தவர்கள் தற்போது திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். வட மாநிலங்களில் இவர்களது மத அரசியல் கொஞ்சம், கொஞ்சமாக தோல்வி அடைந்து வருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE