புதுடெல்லி: நான் தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவன். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை உருவாக்கினோம். ஆனால் நீங்கள் ஒரே நாடு; இந்தி நாடு, ஒரே மொழி இந்தி சமஸ்கிருதம் என்று உருவாக்க முயன்றால் சோவியத் ஒன்றியத்தைப் போல் சிதறுண்டு போகும். நீங்கள் பலவகையான தேசிய இனங்களையும், பண்பாடுகளையும், நாகரிகங்களையும் அழித்து, ஒரே நாடு, ஒரே பண்பாடு என்று ஆக்க முயன்றால் அது பேரழிவை உண்டாக்கும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி நேற்று ஆற்றிய உரையில், ”கடந்த ஜனவரி 31ம் தேதி அன்று குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்ற எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அளித்துள்ள நேரம் மிக மிகக் குறைவாகும்.
இருந்தாலும் இந்த நாடு எந்தப் பாதையில் செல்ல விரும்புகிறது ? அழிவுப் பாதையிலா, சர்வாதிகாரப் பாதையிலா என்பது குறித்து முக்கியமான சில செய்திகளைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்திய உபகண்டம் ஜனநாயகப் பாதையில் போவதா? அல்லது சர்வாதிகாரப் பாதையில் போவதா? என்ற தடுமாற்றத்திலும், நெருக்கடியிலும் உள்ளது. இத்தாலியில் உள்ள புளோரன்° நகரத்தில் வாழ்ந்த மார்க்கியவல்லி ‘தி பிரின்°’ என்ற ஒரு நூல் எழுதினார். அதை முசோலினியும், ஹிட்லரும் தங்களுடைய வழிகாட்டும் நூலாக வைத்துக் கொண்டனர்.
அதில் மூன்று முக்கிய கருத்துகளைக் கூறினார். முதலாவது ஆளுபவர்கள் செய்வது அனைத்தும் சரியே. அது நியாயத்துக்கு உட்பட்டது. இரண்டாவது தேவை. தேவை ஏற்படின் அதற்கு எந்த சட்ட விதிமுறைகளும் கிடையாது. மூன்றாவது முக்கியமானது. உங்கள் செயலின் முடிவு நீங்கள் மேற்கொண்ட வழிமுறைகளை நியாயப்படுத்துகிறது. எத்தகைய இழிவான செயல்களை வேண்டும்மானாலும் செய்து உங்கள் இலக்கை அடையலாம். ஆனால் எங்கள் திருவள்ளுவர், உலகம் போற்றும் அறிவாசான் இதற்கு நேர்மாறானக் கருத்தைக் கூறுகிறார். தாய் பசித்திருந்தாலும் அதற்காக இழிவான செயல்களை செய்ய வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார்.
» ஆளுநர் மாநில அரசுக்கு கட்டுப்பட வேண்டும் என பிரதமர் ஒத்துக்கொள்கிறார்: அமைச்சர் ரகுபதி கேள்வி!
» திருப்பரங்குன்றம் மலையை காக்க நடந்தது முதல்கட்ட போராட்டம்தான்: இந்து முன்னணி தலைவர் பேச்சு
ஈன்றான் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. இது தான் 2000 ஆண்டுகால தமிழர்களின் பண்பாடு. நான் என் நாடு அழிவை நோக்கிச் செல்கிறதோ என்று அச்சப்படுகின்றேன். இப்போது ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே மொழி என்கிறார்கள். இது என்ன அநீதி?. இந்திய பல தேசிய இனங்களைக் கொண்ட, பன்முகத் தன்மையுடைய பண்பாடுகளைக் கொண்ட உபகண்டமாகும்.
200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற நாடு கிடையாது. பல சமஸ்தானங்களையும் ராஜ்யங்களையும் ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து அதற்கு இந்தியா என்று பெயர் சூட்டினர். இப்போது இந்தியா என்ற கருத்து ஒரு நாடு என்று மாறியுள்ளது. ஆனால் இது பல தேசிய இனங்களை கொண்ட நாடு. நான் தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவன். அருகில் அமரந்திருக்கும் சகோதரி மராட்டிய இனத்தைச் சேர்ந்தவர்.
நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை உருவாக்கினோம். ஆனால் நீங்கள் ஒரே நாடு; இந்தி நாடு, ஒரே மொழி இந்தி சமஸ்கிருதம் என்று உருவாக்க முயன்றால் சோவியத் ஒன்றியத்தைப் போல் சிதறுண்டு போகும். ஏனென்றால், இந்தியா வேறுபட்ட பண்பாடுகளைப் பின்பற்றுகிற தேசிய இனங்களைக் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று பண்டிட் ஜவஹர்லால் நேரு பிரகடனப்படுத்தினார்.
நீங்கள் பலவகையான தேசிய இனங்களையும், பண்பாடுகளையும், நாகரிகங்களையும் அழித்து, ஒரே நாடு, ஒரே பண்பாடு என்று ஆக்க முயன்றால் அது பேரழிவை உண்டாக்கும். ஒவ்வொரு தேசிய இனத்தவரும் தங்கள் இன அடையாளத்தை அழிக்க விடமாட்டார்கள். அப்படி அழிக்க முயன்றால் இந்தியா சிதறுண்டு உடையும். இந்த அவையில் 1963ல் பேரறிஞர் அண்ணா தொன்மை வாய்ந்த தமிழ், இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரு மொழி; ஒரு பண்பாடு என்பதே பாஜக அரசின் முழக்கம். அரசியலமைப்பின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான இத்தகைய போக்குகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். பெரும்பாலான மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் ஒரே நாடு; ஒரே தேர்தலுக்கு எதிராக இருக்கும் போது, ஏன் இத்தகைய பிற்போக்கு நடவடிக்கையை தொடர்கின்றனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
குடியரசுத் தலைவர் அவர்களின் உரையில், வக்ஃப் (திருத்த) மசோதா குறித்தும் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் மசோதாவை ஏற்கச் செய்து, அவர்களிடம் இருந்து அறிக்கையைப் பெற்று அவசர அவசரமாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. இந்தியா விடுதலை பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தே சிறுபான்மையினருக்கு பாரம்பரியமாக வழங்கப்பட்டு வந்த அடிப்படை உரிமைகளை பறிப்பதால் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன்.
பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது பாஜக சங்பரிவாரர்களால் மேற்கொள்ளப்படும் மற்றொரு தவறான முயற்சியாகும். நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்கள் மற்றும் மதப் பிரிவுகளால் வெவ்வேறு தனி நபர் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படுகின்றன. எனவே, பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதற்கான எந்தவொரு முயற்சியும் இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தின் அடிநாதமாக விளங்கும் மதச்சார்பின்மை மற்றும் பன்முகத் தன்மையை அழித்துவிடும். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு கேள்விக்கு உள்ளாக்கபடும். அத்தகைய முயற்சியை எங்களது முழு சக்தியைக் கொண்டு நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.
நமது பிரதமர் அணு மின் நிலையத்தை வலியுறுத்துகிறார். மேலும் கூடுதலாக அணு உலைகள் தொடங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே 1988 செப்டம்பர் 22ம் தேதி இதே மாநிலங்களவையில் அன்றைய பிரதமர் அணு மின் நிலையம் அமைப்பதற்கு சோவியத் ரஷ்யாவுடன் உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது என்றார். அப்போது, எந்த இடத்தில் அமைக்கப் போகிறீர்கள் என்று நான் கேட்டேன். அவர் பதில் அளிக்கவில்லை. எந்த இடத்தில் அமையப் போகிறது என்பதை ரகசியமாக வைத்திருந்தார். தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே நான்கு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து குறிப்பாக பெண்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானோர் போராடி வருகிறார்கள்.
ரஷ்யாவில் உள்ள செர்னோபில் அணு மின் நிலையம் விபத்துக்கு உள்ளாகி லட்சக்கணக்கானவர்கள் பலியானர்கள். அமெரிக்கா வின் ஒரு மைல் தீவில் ஏற்பட்ட அணு மின் நிலைய விபத்தில் லட்சக்கணக்கான மக்கள் இறந்துபோனார்கள்.இப்போது மறுபடியும் தமிழ்நாட்டில் அணு மின் நிலையம் தொடங்க தொடங்க முயற்சிக்கிறார்கள். ஆகவே நெருப்போடு விளையாடாதீர்கள் என எச்சரிக்கிறேன்” என்று வைகோ உரையாற்றினார்.