திருப்பரங்குன்றம் வருவதை தடுக்க தென் மாவட்டங்களில் இந்து அமைப்பு, பாஜகவினர் 1,633 பேர் கைது

By KU BUREAU

மதுரை: திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்துக்கு வருவதை தடுக்க, தென் மாவட்டங்களில் பாஜக மூத்த தலைவர்கள் உட்பட 1,633 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்கள் விவரம் வருமாறு: மதுரையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், மாநில பாஜக அரசு தொடர்புத்துறை தலைவர் ராஜரத்தினம், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜ்குமார், சதீஷ்குமார், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் உட்பட ஆயிரம் பேரை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். மதுரை ஆதீனம் ஆதினத்தைவிட்டு வெளியேற போலீஸார் தடை விதித்து காவலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் சூலக்கரையில் உள்ள பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கனை போலீஸார் வீட்டுக்காவலில் வைத்தனர். சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக, இந்து முன் னணியைச் சேர்ந்த 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி அருகே அழகாபுரியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, காரில் திருப்பரங்குன்றம் புறப்பட தயாரானார். அங்கு வந்த டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீஸார் அவரிடம் வெளியே செல்ல அனுமதி இல்லை என்று கூறினர். இதனால் அதிருப்தி அடைந்த ஹெச்.ராஜா போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் தொடர்ந்து காரிலேயே அமர்ந்திருந்தார்.

மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, ஹெச்.ராஜாவை போலீஸார் விடுவித்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் பாஜக, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 56 பேரை போலீஸார் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கைது செய்தனர்.ராமேசுவரத்தில் பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன், ராமநாதபுரம் அண்ணாநகரில் உள்ள பாஜக மகளிரணி மாநில துணைத் தலைவர் கலாராணி உட்பட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர்.

மேலும், நேற்று காலை ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் முன் திருப்புகழ் பாராயணம் மற்றும் கந்த சஷ்டி கவசம் படித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நகராட்சி உறுப் பினர் குமார் மற்றும் 6 பெண்கள் உள்ளிட்ட பாஜகவினர் 29 பேரை போலீஸார் கைது செய்தனர். தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்டத் தலைவர் ராமராஜ், மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, சிவசேனா மாநில துணைத் தலைவர் குருஅய்யப்பன் ஆகியோரை முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக போலீஸார் கைது செய்தனர்.

தேனி காமராஜர் பேருந்து முனையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்பினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக வர்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயராம் உட்பட மாவட்டத்தில் 121 பேரை போலீஸார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு டோல்கேட் பகுதி யில் சிலர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 347 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE