மதுரை: திருப்பரங்குன்றத்தில் கடந்த ஒரு மாதமாக நீடிக்கும் போராட்ட அறிவிப்புகள், போலீஸ் குவிப்பு, கெடுபிடி, 144 தடை உத்தரவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோயிலை நம்பி தொழில் செய்யும் வணிகர்கள், சிறு மற்றும் தெருவோர வியாபாரிகள் என உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிவினை ஏற்படுத்துவோரை தமிழக அரசு தண்டிக்க வேண்டும் என அவர்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் கடந்த ஒரு மாதமாக நடத்தும் போராட்டங்களால், கோயிலை நம்பியுள்ள உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 144 தடை உத்தரவால் திருப்பரங்குன்றம் பகுதி மக்களின் இயல்பு நிலை முடங்கிப்போய் உள்ளது.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறிய தாவது:
மூதாட்டி இந்திராணி (70): எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து திருப்பரங்குன்றம் மலையை கந்தர் மலை என்றுதான் அழைப்போம். சமீபத்தில் சிக்கந்தர் மலை எனச் சொல்வது கஷ்டமாக உள்ளது. அங்கு ஆடு, மாடு, கோழிகளைப் பலியிடுவது கிடையாது. அகிம்சை வழியில்தான் வழிபாடுகள் நடக்கும்.
» ஓய்வூதியத் திட்டம் குறித்து குழு அமைப்பது ஏமாற்று வேலை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
» தமிழக வரலாற்றிலேயே மிக மோசமான நிர்வாகத் திறமையற்ற அரசு இதுதான்: ஓபிஎஸ் சீற்றம்
இஸ்லாமியர்களும், இந்துக்களும் மாமன், மைத்துனர் என உறவுமுறைகளுடன் பழகி வருகிறோம். உள்ளூரில் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். வெளியூர்க்காரர்களால்தான் எதையாவது செய்துவிட்டு போய்விடுகின்றனர். இது எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துகிறது. புதிய நடைமுறையைக் கொண்டு வருகின்றனர். இப்பிரச்சினையால் உள்ளூர் மக்கள் வெளியில் செல்ல முடியவில்லை. பிரிவினை ஏற்படுத்துவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் நிறுவன தொழிலாளி தினகரன் (52): உள்ளூரிலுள்ள இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையாகவே உள்ளோம். பிரிவினைக்கு வெளியூர்க்காரர்கள்தான் காரணம். தற்போது நடப்பது போன்று முன்னெப்போதும் நடந்ததில்லை. இது ஒரு வரலாற்றுப் பிழை. இதுபோன்ற சம்பவத்தால் வியாபாரிகள், வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். வெளியூரிலிருந்து பக்தர்களும் கோயிலுக்கு வர அச்சப்படுகின்றனர். அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் இது நடக்கிறது. தமிழக முதல்வர் நேரடியாகத் தலையிட்டு விரைந்து தீர்வுகாண வேண்டும்.
வியாபாரிகள் சங்கத் தலைவர் சிராஜூதீன் (60): திருப்பரங்குன்றத்தில் இதுபோன்ற நிகழ்வு நடந்ததில்லை. இந்து முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் சொந்தபந்தங்களாக வாழ்ந்து வருகிறோம். வெளியூர் நபர்களால்தான் பிரிவினை ஏற்படுகிறது. உள்ளூர் மக்கள் மத வேறுபாடின்றி முருகன் கோயிலுக்கும், சிக்கந்தர் பள்ளிவாசலுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறோம்.
அரசியல் காரணமாகவே அசாதாரண நிகழ்வு நடக்கிறது. தலைமுறை தலைமுறையாக எவ்விதப் பிரிவினையுமின்றி வாழ்ந்து வருகிறோம். சமீபகாலமாக நடப்பது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.
பூ வியாபாரி பிச்சையம்மாள்: திருப்பரங்குன்றத்தில் 40 ஆண்டுகளாக வசிக்கும் நான், 16 கால் மண்டபத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறேன். இவ்வளவு போலீஸ் கூட்டத்தை இங்கு பார்த்ததே இல்லை. கோயில் ஸ்தலம் பெரிய கலவர பூமியைப்போல் தோற்றமளிக்கிறது. சிலர் பிரச்சினை செய்வதால் பக்தர்கள் கோயிலுக்கு வர அச்சப்படுகின்றனர். எங்களை போன்ற அன்றாட வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படு கின்றனர். தமிழக அரசு தலையிட்டு சுமுகமான முடிவு எடுத்து அமைதியை ஏற்படுத்த வேண்டும். அரசு கேட்காவிட்டால் ஆண்டவன் முருகனே தண்டிப்பார்.
- என்.சன்னாசி/சுப.ஜனநாயகசெல்வம்